தோ பாயோ உள்ளிட்ட பழமையான நகர்ப்புறப் பகுதிகளில் மூத்தோருக்கு மேம்பட்ட ஆதரவு வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17), தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் மத்திய கல்லூரியில் அவர் உரையாற்றினார்.
சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகள் (CCAs) திட்டம் இதற்கான முக்கியத் தீர்வாக இருக்க முடியாது என்றாலும் அதேபோன்ற சிந்தனை மேலும் விரிவான அக்கம்பக்கத்திற்கும் பொருந்தும் என்றார் திரு வோங்.
அதன் மூலம், மூத்தோர் தற்போது வசிக்கும் இடத்திலேயே வேண்டிய ஆதரவைப் பெற உதவும் ‘ஏஜ் வெல்’ அக்கம்பக்கப் பகுதிகளை உருவாக்க முடியும்.
இதன் சாத்தியங்களை ஆராய, தமது குழுவினருடன் அண்மையில் தோ பாயோ சென்று, குடியிருப்பாளர்களைச் சந்தித்தாகப் பிரதமர் கூறினார்.
அதன் அடிப்படையிலான மூன்று யோசனைகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
முதலாவது, நடவடிக்கை நிலையங்களை மூத்தோர் மேலும் எளிதாக அணுகும் வகையில் அமைத்தல்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோ பாயோவில் துடிப்புடன் மூப்படைதலுக்கான ஆறு நிலையங்கள் தொடங்கப்பட்டன. தற்போது அந்த எண்ணிக்கை 13க்கு உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் மூத்தோர் சிலர் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியுள்ளதைப் பிரதமர் சுட்டினார்.
எனவே, இத்தகைய நிலையங்களுக்கான புதிய இடங்கள் அடையாளம் காணப்படும் என்றார் அவர். அவற்றில் கூடுதல் நடவடிக்கைகள், கூடுதல் உடற்பயிற்சிகளுக்கான வசதி செய்துதரப்படும்.
‘கார்டியோ டிரம்மிங்’ எனும் நடவடிக்கையில் அமைச்சர் கிரேஸ் ஃபூவும் தாமும் இணைந்துகொண்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
பார்வைக்கு எளிதானதுபோலத் தோன்றினாலும் அது கடுமையான உடற்பயிற்சி என்று கூறிய திரு வோங், பெண்களுக்கு ஏற்ற இத்தகைய நடவடிக்கையைப் போலவே தச்சுவேலை போன்ற ஆண்களுக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படுவதாகச் சொன்னார்.
மூத்தோர் வழக்கமாகச் சந்தித்து, அணுக்கமான நட்பைப் பேண உதவும் வகையில் இந்த நிலையங்கள் அமைந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
சிலர், ஒருபடி மேலே சென்று தொண்டூழியத்திலும் ஈடுபடலாம். எடுத்துக்காட்டாக, சக்கர நாற்காலிகளைப் பழுதுபார்க்கும் மூத்தோர் குழுவைச் சுட்டிய திரு வோங், மூத்தோர் தங்களை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் கருதாமல் தாங்கள் மற்றவர்களைப் பராமரிக்கவும் முன்வருவதை இது காட்டுவதாகக் கூறினார்.
பிரதமர் பகிர்ந்துகொண்ட இரண்டாவது யோசனை, ‘சிசிஏ’ வீடுகளை போன்றே வீடுகளில் மூத்தோருக்கான சேவைகளை விரிவுபடுத்துதல்.
அடிப்படைச் சுகாதாரப் பரிசோதனை அல்லது எளிய பழுதுபார்ப்புச் சேவை, இரண்டில் ஒன்றை மூத்தோர் தேர்ந்தெடுக்கலாம். தேவைப்பட்டால், வீட்டுவேலை, துணி துவைத்தல், உணவு விநியோகம், குளிப்பது அல்லது உணவு ஊட்டுவதில் உதவி போன்ற கூடுதல் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இச்சேவைகளை ஒருங்கிணைக்க தனிப்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர். அவர்கள் வழக்கமான இடைவெளிகளில் மூத்தோரை நேரில் சந்திப்பதுடன் அவசரகாலத்தில் உடனடியாக உதவி வழங்கும் திறனையும் பெற்றிருப்பர்.
மூன்றாவதாக, சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை மூத்தோருக்கு அருகில் கொண்டுசெல்லுதல்.
மறுவாழ்வு சிகிச்சை அல்லது உடலியக்க சிகிச்சை தேவைப்படுவோருக்கான கூடுதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார் திரு வோங்.
மேலும், பொது மருத்துவமனைகள் சமூகங்களில் சுகாதாரப் பராமரிப்பு முகப்புகளை அமைக்கும் என்றும் அங்கு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு வழங்கப்படும் கவனிப்பு, மருந்துகள் வழங்குதல் போன்ற சேவைகளில் தாதியர் ஈடுபடுத்தப்படுவர் என்றும் பிரதமர் கூறினார்.
பிற நாடுகளில் இத்தகைய ஏற்பாடுகள் ‘ஓய்வுக்காலக் கிராமம்’ என்று பெயரில் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
இருப்பினும் சிங்கப்பூரில் நம் மூத்தோர் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிப்பதை நாம் விரும்பவில்லை என்றும் அதற்குப் பதிலாக நலமுடன் மூப்படையும் அக்கம்பக்கங்கள் அவர்களுக்காக அமைக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தொடக்கத்தில், மூத்தோர் அதிகம் வசிக்கும் தோ பாயோவிலும் மேலும் ஓரிரு வட்டாரங்களிலும் அவை அமைக்கப்படும். பின்னர் அவை கட்டங்கட்டமாக விரிவுபடுத்தப்படும் என்று திரு வோங் கூறினார்.
இத்தகைய முயற்சிகள் மூலம் ஒவ்வொரு முதியவரும் மகிழ்ச்சியுடன் முதுமையடையக்கூடிய இடமாகச் சிங்கப்பூரை உருவாக்குவோம் என்றார் அவர். அவ்வாறு, தனிமையிலோ தனித்தோ அல்லாமல் ஒன்றிணைந்து முதுமையடைவோம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.