தமிழ்மொழியை வாழும் மொழியாக்க ஒன்றிணைவோம்: பிரதமர் வோங்

தமிழ்மொழியை வாழும் மொழியாக்க ஒன்றிணைவோம்: பிரதமர் வோங்

3 mins read
723cd3fd-16c3-49b2-9931-30545d111037
சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங் (வலது), சங்கத்தின் தலைவர் தனபால் குமார் (நடுவில்), தமிழ் வளர்ச்சிக் குழுவின் தலைவர் தினேஷ் வாசு தாஸ் (இடது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமிழையும் நமது தாய்மொழிகளையும் உயிர்ப்புடன் வைத்திருக்க, ஒட்டுமொத்தச் சமூகமும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 17) ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்ற சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அவர் அவ்வாறு கூறினார்.

மொழி ஆசிரியர்கள் மாணவர்களிடையே மொழிகளின்மீதான ஆர்வத்தை விதைக்கின்றனர் என்ற அவர், தமிழாசிரியர் சங்கம் போன்ற அமைப்புகள் அவ்வாசிரியர்களுக்கு ஆதரவளிப்பதுவழி மொழியை வளர்க்கின்றன.

இல்லங்களில் பெற்றோர் மொழிப் பயன்பாட்டைப் பேணும் வேளையில், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரும் ஊடக அமைப்புகள், சமூகக் குழுக்கள் ஆகியவையும் மொழிக்கு அழகு சேர்க்கின்றன.

இவ்வாறே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது தாய் மொழிகளை வாழும் மொழிகளாக்க வேண்டும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.

சமூகத்தில் அனைவரும் அவரவர் பங்கைச் சரிவர ஆற்றினால், தமிழ் தொடர்ந்து சிங்கப்பூரில் தழைத்தோங்கும் என்றார் பிரதமர்.

“நமது தாய் மொழிகள் நம்மை நமது வேர்களுடன், விழுமியங்களுடன், கலாசாரத்துடன் இணைக்கின்றன. அவை நமது அடையாளத்தைப்பற்றி நாம் ஆழமாகத் தெரிந்துகொள்ளவும் உதவியாக உள்ளன,” என்று அவர் கூறினார்.

தாய்மொழியைப் பேணுதல் என்பது பல்லின நாடு எனும் சிங்கப்பூரின் சிறப்பு அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதன் காரணமாகவே தாய்மொழிக் கற்றல் சிங்கப்பூரின் கல்வித் திட்டத்தின் அடிப்படையாக விளங்குகிறது என்று அவர் விவரித்தார்.

ஆனால், தற்காலத்தில் தாய்மொழிக் கற்றல் கடினமாகியுள்ளதைப் பிரதமர் சுட்டினார்.

“ஆங்கிலம் பேசும் சூழ்நிலைகள் தற்போது அதிகம் நிலவுவதால் மாணவர்களுக்குத் தாய்மொழிக் கற்றல் சவாலாக மாறியுள்ளது.

“இச்சூழலில் தமிழாசிரியர்களின் பணி இன்றியமையாததாக விளங்குகிறது. அவர்கள் மொழி நுணுக்கங்களுடன், பண்பாட்டுக் கதைகளையும் விழுமியங்களையும் கற்பித்து வருவதன்வழி, ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தங்கள் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் கடத்துகின்றனர்,” என்று அவர் கூறினார்.

அந்தச் சவாலான பணியை ஆசிரியர்கள் தொடர்ந்து புத்தாக்கமான வழிகளில் செய்து வருவதைத் திரு வோங் பாராட்டினார்.

தமிழ் மொழியின்மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை வளர்க்க அயராது உழைத்துவரும் ஆசிரியர்களுக்குச் சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள் சங்கம் பக்கபலமாக இருந்து வந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தமிழாசிரியர்களுக்கும் அவர்களது கற்பித்தலுக்கும் துணைநிற்க அரசாங்கம் தொடர்ந்து சங்கத்துடன் இணைந்து செயல்படுமென அவர் உறுதியளித்தார்.

அத்தகைய முயற்சிகளில் சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள் சங்கம், தமிழ் முரசு, தமிழ் வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்யும் நல்லாசிரியர் விருதுகளும் அடங்குமென அவர் குறிப்பிட்டார்.

நிறைவு விழாவையொட்டி சங்கம் தயாரித்த சிறப்பு ஆவணத் தொகுப்பையும் மறுசீரமைக்கப்பட்ட சங்கத்தின் இணையப் பக்கத்தையும் பிரதமர் அறிமுகம் செய்தார்.

விழாவையொட்டி தொகுக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ்  ஆசிரியர்கள் சங்கத்தின் சிறப்புப் புத்தகத்தைப் பிரதமர் வெளியிட்டார்.
விழாவையொட்டி தொகுக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் சிறப்புப் புத்தகத்தைப் பிரதமர் வெளியிட்டார். - படம்: த.கவி

தமிழர்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்களின் வரலாறு சென்றடைய வேண்டுமென்ற நோக்குடன் புத்தகம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

அப்புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இவ்வாண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் உலகத் தமிழாசிரியர்கள் மாநாட்டில் வெளியிடப்படுமென்று சங்கத்தின் தலைவர் தனபால் குமார் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சிங்கப்பூர் இந்தியக் கல்வி அறக்கட்டளையும் சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள் சங்கமும் உயர்கல்வி நிலையங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு உதவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

தமிழ் வளர்ச்சி குழுவின் தலைவர் தினேஷ் வாசு தாசும் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் ஆலோசகர் விக்ரம் நாயரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தமிழ்ஆசிரியர்கள்சங்கம்