மூத்தோருக்குக் கடிதங்களைப் படித்துத் தரும் ‘லெட்டர்கீ’

2 mins read
ab05daf4-03fb-4776-9ab4-f13b99047cd0
லெட்டர்கீ தொழில்நுட்பத்தைத் தயாரிக்க குழு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்தோருக்குத் தபால் பெட்டிகளில் வரும் கடிதங்களைச் சுருக்கமாக மொழிபெயர்த்து, அவற்றில் உள்ள முக்கிய விவரங்களை எடுத்துசொல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் கண்டுள்ளது.

லெட்டர்கீ (Letter Key) என்று அழைக்கப்படும் அந்தத் தொழில்நுட்பத்தை ஐந்து இளையர்கள் கொண்ட குழு உருவாக்கியது.

தபால் பெட்டிகளில் வரும் கடிதங்களை ஒரு பார்வை பார்த்தபின் ஓரத்தில் வைத்துவிடுவது பலரது வழக்கம். ஆனால் மூத்தோர் அப்படி அல்ல என்பதைக் குழு கண்டறிந்தது.

துடிப்பாக மூப்படையும் நிலையங்களுக்குக் கடந்த ஜூன் மாதம் சென்ற குழு, மூத்தோர் பலர் தங்களுக்குக் கட்டுக்கட்டாக வரும் கடிதங்களைக் நிலையங்களில் உள்ள ஊழியர்களிடம் கொடுத்து வாசித்துத் தரும்படி கூறுவதைக் குழு கவனித்தது.

“அரசாங்கம் அனுப்பிய கடிதங்களை நாள் முழுவதும் மூத்தோர் ஊழியர்களிடம் கொடுத்து படிக்கவும் மொழிபெயர்த்து சொல்லவும் கேட்கின்றனர்,” என்று குழுவைச் சேர்ந்த 27 வயது ஓவன் கான் சொன்னார்.

ஒவ்வொரு முறையும் கடிதங்களைப் படித்து அதில் உள்ள விவரங்களைச் சொல்ல நிலைய ஊழியர்களுக்கு எப்படியும் முக்கால் மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரையாவது ஆகிறது என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் மொழித் தடை இருந்தால் நிலைமை இன்னும் சிக்கலாவதை கான் சுட்டினார்.

இருதரப்புக்கும் உதவி செய்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த லெட்டர்கீ உருவாக்கப்பட்டது.

நான்கு அதிகாரத்துவ மொழிகளைத் தாண்டி கேன்டனிஸ், ஹோக்கியென் ஆகிய மொழிகளிலும் கடிதங்களை லெட்டர்கீ செயலியால் மொழிபெயர்க்க முடியும்.

லெட்டர்கீ தொழில்நுட்பம் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கடிதங்களை மொழிபெயர்த்துத் தருகிறது.
லெட்டர்கீ தொழில்நுட்பம் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கடிதங்களை மொழிபெயர்த்துத் தருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்கம் காப்புறுதி நிறுவனத்திலிருந்து காப்புறுதி தொடர்பில் வரும் கடிதங்கள், மத்திய சேமநிதி வாரியத்திலிருந்து வரும் வருமானம் தொடர்பான கடிதங்கள் ஆகியவற்றைத்தான் ஊழியர்களிடம் மூத்தோர் பெரும்பாலும் தருகின்றனர்.

“அரசாங்கக் கடிதங்கள் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் வந்தாலும் முக்கியமாக நாங்கள் குறிப்பிட விரும்புவது அதில் பயன்படுத்தப்பட்டுள்ள சிக்கலான சில வார்த்தைகள்,” என்று திரு கான் கூறினார்.

அத்தகைய சிக்கலான சொற்களை லெட்டர்கீ எளிமைப்படுத்தித் தரும் ஆற்றல் கொண்டது.

குறிப்புச் சொற்கள்