சிங்கப்பூர்க் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையத்திடமிருந்து நிரந்தரவாசியாக விண்ணப்பம் செய்யும்படி வரும் கடிதங்கள் போலியானவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆணையத்தின் முத்திரையும் தலைப்பும் கொண்ட போலிக் கடிதம் குறித்தும் வரி செலுத்தும்படியான கடிதம் குறித்தும் அறிந்திருப்பதாக ஆணையம், சனிக்கிழமை (மார்ச் 28) அறிக்கை வெளியிட்டது.
போலிக் கடிதத்தைப் பெற்ற ஒருவர் நிரந்தரவாசியாவதற்கான விண்ணப்பத்தை நிறைவேற்ற மோசடிக்காரரிடம் $5,000 கட்டணம் செலுத்தியுள்ளார்.
நிரந்தரவாசியாகக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஆணையம் சொன்னது.
குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் அதுகுறித்து பாதிக்கப்பட்டவர் விசாரித்தார். அப்போதுதான் ஆணையத்திற்கு எந்த விண்ணப்பமும் வரவில்லை என்றும் எந்தக் கடிதத்தையும் ஆணையம் அனுப்பவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர் அறிந்துகொண்டார்.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து நிரந்தரவாசித் தகுதிக்கு விண்ணப்பம் செய்யும்படியான மோசடித் தொடர்பில் 12 புகார்கள் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நிரந்தரவாசம் உள்ளிட்ட நீண்டகால விசாக்களைப் பெற்றுத்தர குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் தனியார் நிறுவனங்களையோ ஆலோசகர்களையோ நியமிக்காது என்று தெரிவித்தது.
அத்தகைய சேவைகளை நாடுவோர் கவனத்துடன் இருக்கும்படி ஆணையம் எச்சரித்தது.
தொடர்புடைய செய்திகள்
குடிநுழைவு தொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆணையத்தின் இணையப்பக்கம் மூலம் அனுப்பும்படியும் அதிகாரிகள் நினைவூட்டினர்.

