2025 ஆம் ஆண்டுப் பொதுக் கல்விச் சான்றிதழ் (ஜிசிஇ) மேல்நிலைத் தேர்வுகளை எழுதிய மாணவர்களில் 94.7 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 10,977 மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும் அவர்களில் 10,393 பேர் பொதுப் பாடங்களுடன் குறைந்தது மூன்று ‘எச் 2’ பாடங்களில் தேர்ச்சி பெற்றதாகவும் கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
பல்கலைக்கழக நுழைவுச்சேர்க்கைக்குரிய கூட்டுத்தொகை மதிப்பீட்டு முறை மாற்றம் கண்டதையடுத்து அந்த மாணவர்கள் மேல்நிலைத் தேர்வுகளை எதிர்கொண்டனர்.
முடிவுகளையடுத்து, தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் சேரவும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவும் விரும்பும் மாணவர்கள் அந்தந்தக் கல்லூரி இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேல்நிலைத் தேர்வுச் சான்றிதழின் அச்சுப்பிரதியைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு 130 பாடங்களில் சில பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். இதனால் பலதுறைக் கல்லூரியில் பட்டயம் பெறுவதற்கு எடுக்கும் நேரத்தை ஓராண்டு வரை குறைக்கலாம்.

