மேல்நிலைத் தேர்வு முடிவுகள்: 94.7 விழுக்காட்டினர் தேர்ச்சி

மேல்நிலைத் தேர்வு முடிவுகள்: 94.7 விழுக்காட்டினர் தேர்ச்சி

2 mins read
3a1b4b64-340f-4939-92f6-3915cf39640b
தெமாசெக் தொடக்கக் கல்லூரியில் முடிவுகளைப் பெறவந்த மேல்நிலைத் தேர்வெழுதிய மாணவர்கள். - படம்: ஜெசிகா ஜீவா
வெள்ளிக்கிழமையன்று தமது தேர்வு முடிவுகளைப் பெற்றா தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவர் தன்வின்.
வெள்ளிக்கிழமையன்று தமது தேர்வு முடிவுகளைப் பெற்றா தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவர் தன்வின். - படம்: ஜெசிகா ஜீவா

தற்போது உலகப் போக்கை மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆய்வுகள் மேற்கொள்வதுடன், அத்துறை வல்லுநராகவும் விரும்புகிறார் மாணவர் ரமேஸ்குமார் தன்வின், 19.

மின்னிலக்கத் துறையில் சாதிக்க விரும்பும் தன்வின்

‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளில் சிறந்து விளங்கும் தன்வின், கல்வி அமைச்சின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் திட்ட உபகாரச் சம்பளம் பெற்றவர்.

தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவரான இவர், பொதுக் கல்விச் சான்றிதழ் (ஜிசிஇ) மேல்நிலைத் தேர்வில் உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

விழியாடி ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவு குறித்த அவரது ஆராய்ச்சி, சிங்கப்பூர் அறிவியல், பொறியியல் கண்காட்சியில் தங்க விருதைப் பெற்றது.

மேலும் இவர், கடந்த ஆண்டு அமெரிக்கா ஒஹாயோவில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் பொறியியல் கண்காட்சியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து இரு விருதுகளையும் வென்று சாதனை படைத்தார்.

“செயற்கை நுண்ணறிவின்மீது இருந்த பேரார்வமும், ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதலும், பெற்றோரின் ஊக்கமும் இணைந்துதான் என்னால் இந்த ஆய்வைச் சிறப்பாக மேற்கொள்ள முடிந்தது” என்று கூறினார் தன்வின்.

தன்முனைப்பால் சிகரம் தொடும் ஷியாம்

ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி மாணவர் ‌ஷியாம்.
ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி மாணவர் ‌ஷியாம். - படம்: தா‌‌‌ஷாயினி சுஹேந்திரன்

தனித்துவமான திறமையும், தளராத முயற்சியும் ஒரு மாணவனை எப்படி உயர்த்திச் செல்லும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார் ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி மாணவர் ஷியாம் முருகேசன்.

சிறுவயதில் மடிக்கணினிகளைப் பிரித்து அதன் பாகங்களை ஆராய்வதில் தொடங்கிய ஆர்வம், இன்று அவரை ஒரு சிறந்த கணினி மற்றும் இயற்பியல் (Physics) துறை மாணவராக மாற்றியுள்ளது.

தமது கல்லூரியின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவராக, 2024ஆம் ஆண்டு தேசிய எந்திரனியல் போட்டியில் தனது குழுவை வெற்றிபெறச் செய்தார்.

கல்வி அமைச்சின் பொறியியல், தொழில்நுட்பத் திட்டஉபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ள ஷியாம், எதிர்காலத்தில் கணினிப் பொறியியல் துறையில் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளார்.

“அனைவரும் பயன்படுத்த ஏதுவான பொது மென்பொருள் (Open-source) திட்டங்கள் சமூகத்திற்காக உருவாக்கப்பட்டவை. அவற்றில் பங்களிப்பதன் மூலம் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண விரும்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.

மேல்நிலைத் தேர்வு முடிவுகள்

2025ஆம் ஆண்டுப் பொதுக் கல்விச் சான்றிதழ் (ஜிசிஇ) மேல்நிலைத் தேர்வுகளை எழுதிய மாணவர்களில் 94.7 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் 10,977 மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும் அவர்களில் 10,393 பேர் பொதுப் பாடங்களுடன் குறைந்தது மூன்று ‘எச் 2’ பாடங்களில் தேர்ச்சி பெற்றதாகவும் கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வு மதிப்பீட்டுக் கழகமும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

பல்கலைக்கழகச் சேர்க்கைக்குரிய கூட்டுத்தொகை மதிப்பீட்டு முறை மாற்றம் கண்டதையடுத்து அம்மாணவர்கள் மேல்நிலைத் தேர்வெழுதினர்.

முடிவுகளையடுத்து, தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் சேரவும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவும் விரும்பும் மாணவர்கள் அந்தந்தக் கல்லூரி இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேல்நிலைத் தேர்வுச் சான்றிதழின் அச்சுப்படியைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு 130 பாடங்களில் சில பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். இதனால் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயம் பெறுவதற்கு எடுக்கும் நேரத்தை ஓராண்டு வரை குறைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்