சுகாதார அமைச்சு சிங்கப்பூரில் இயங்கிவரும் ‘கார்ட்லைஃப்’ தொப்புள்கொடி வங்கியின் உரிமத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
உரிமம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 2027ஆம் ஆண்டு ஜனவரி 13 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று புதன்கிழமை ‘கார்ட்லைஃப்’ அறிவித்துள்ளது.
அதன் நிதிநிலை, நிறுவன ஆவணங்களைச் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் (ஜனவரி 14) சமர்ப்பித்தபோது இந்த விவரத்தை கார்ட்லைஃப் வெளியிட்டது.
இருப்பினும் புதிய தொப்புள்கொடி மாதிரிகளைச் சேகரிப்பது, சோதனை செய்வது, வங்கியில் வைத்திருப்பது போன்றவற்றை அந்நிறுவனம் மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அந்நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உரிமத்தின் புதுப்பிப்பு, நிறுவனத்துக்கு இதுவரை அதன் பராமரிப்பில் இருக்கும் தொப்புள்கொடி மாதிரிகளைத் (CBUs) தொடர்ந்து வைத்திருக்கவும் வேறு தேவைகளுக்கு மாற்றிவிடவும் அனுமதிக்கிறது.
அதன்படி, நிறுவனம் தன்னிடம் வங்கியில் இருக்கும் மாதிரிகளை அதுசார்ந்த சேவைகள் வழங்கும் உள்ளூர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றிவிடலாம். அதோடு அவ்வாறு வழங்கப்பட்டுள்ள மாதிரிகளைத் திரும்பப் பெற்று மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கு வழங்கலாம்.
அதன் வாடிக்கையாளர்கள் தொப்புள்கொடி மாதிரிகளையும் தொப்புள்கொடி மூலம் கைக்குழந்தைகளிடமிருந்து பெறப்படும் திசுக்களையும் அழித்துவிடும்படி கேட்டுக்கொண்டால், அதனை முறைப்படி நிறுவனம் செய்ய வேண்டும். அதற்கும் நீட்டிக்கப்பட்ட உரிமம் அனுமதி வழங்குகிறது.
கார்ட்லைஃப் நிறுவனத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சோதனையில் அதன் வங்கியில் வைக்கப்பட்டிருந்த தொப்புள்கொடி மாதிரிகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. பிறகு அதன் உரிமம் சுகாதார அமைச்சால் இடைநீக்கம் செய்யப்பட்டது. அந்நிறுவனத்தின்மீது $5 மில்லியனுக்கும் மேற்பட்ட நஷ்டஈடு வழக்குகள் அச்சமயம் மேற்கொள்ளப்பட்டன.

