பூனைகளுக்கு உரிமம் பெறும் திட்டம் நாளை அமலாகிறது

2 mins read
df0a833f-3966-403a-8ec2-f2d3229db11d
1989ஆம் ஆண்டுக்குப் பிறகு வீவக வீடுகளில் பூனைகளை வளர்க்க செப்டம்பர் 1 முதல் சட்டப்படி அனுமதிக்கப்படும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பூனைகளை வளர்க்க உரிமம் பெறும் திட்டம் செப்டம்பர் 1 முதல் அமலாகிறது.

திட்டம் நடப்புக்கு வந்ததும், பூனைகளை தங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்போர் அதற்கான உரிமம் வேண்டி விண்ணப்பிக்கலாம்.

பூனை உரிமத் திட்டம் நடப்புக்கு வருவதைத் தொடர்ந்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் பூனைகளை வளர்ப்பது இனி சட்டப்படி அனுமதிக்கப்படும்.

1989ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறை அந்த அனுமதி வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 1 முதல் 2026 ஆகஸ்ட் 31 வரை இந்தத் திட்டம் ஈராண்டு உருமாற்ற காலமாகக் கருதப்படும்.

பூனை வளர்ப்போர் மாற்றங்களைக் கடைப்பிடிக்க ஏதுவாக அவ்வாறு செய்யப்படுகிறது என்று தேசிய பூங்கா வாரியத்தின் விலங்கு, கால்நடைகள் சேவைப் பிரிவும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் தெரிவித்து உள்ளன.

அந்த இரு அமைப்புகளும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

உருமாற்ற கால முடிவில், வீட்டில் வளர்க்கப்படும் எல்லாப் பூனைகளும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான நுண்சில்லுகள் அவற்றில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

2026 செப்டம்பர் 1 முதல், உரிமம் பெறாமல் பூனைகளை வளர்ப்பது, தேசிய பூங்கா வாரியத்தின் விலங்குகள், பறவைகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்செயலாகக் கருதப்படும்.

புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பூனைகள் வரை வைத்திருக்கலாம். அனுமதி பெற்ற நாய் ஒன்றையும் வளர்க்கலாம்.

தனியார் வளாகங்களில் மூன்று பூனைகளோ, மூன்று நாய்களோ அல்லது மூன்று எண்ணிக்கையில் இரண்டும் கலந்தோ வைத்திருக்கலாம்.

பூனைகளுக்கு வழங்கப்படும் நுண்சில்லுகளில் உள்ள எண்ணைப் பயன்படுத்தி பூனை உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வேளாண்-உணவு, கால்நடை ஆணையத்தின் விலங்கு உரிமத்திற்கான https://pals.avs.gov.sg/ என்னும் இணையத்தளம் வாயிலாக அவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

2024 செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்னரே பூனையை வைத்திருப்பதை, விண்ணப்பம் செய்யும்போது அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

குறிப்புச் சொற்கள்