சிங்கப்பூர்வாசிகளின் உத்தேச ஆயுட்காலம் கடந்த ஆண்டு (2024) அதிகரித்ததாகச் செவ்வாய்க்கிழமை (மே 27) புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டைவிட மட்டுமன்றி கடந்த பத்தாண்டு காலகட்டத்தைவிடவும் அது அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர்வாசிகளின் உத்தேச ஆயுட்காலம், கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2024ல் 0.9 ஆண்டு அதிகரித்து 83.5 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 2014ல் அது 82.6 ஆண்டுகளாகப் பதிவானது. 2023ல் அது 83.2 ஆண்டுகளாக இருந்தது.
2020 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் உத்தேச ஆயுட்காலம் குறைவாகப் பதிவானது. கொவிட்-19 கிருமிப்பரவலின் தாக்கம் அதற்குக் காரணம்.
உத்தேச ஆயுட்காலம் என்பது ஒருவர் சராசரியாக எத்தனை ஆண்டுகள் உயிர்வாழக்கூடும் என்பதைத் தெரிவிக்கும்.
புள்ளிவிவரத் துறையின் அறிக்கையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர்வாசிகளின் முழுமையான ஆயுட்கால அட்டவணையின்கீழ் உத்தேச ஆயுட்காலம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூர்வாசிகள் என்பது சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் குறிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் இருபாலருக்கும் ஆயுட்காலம் அதிகரித்தபோதும் ஆண்களைவிடப் பெண்களின் ஆயுட்காலம் கூடுதல் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
2024ஆம் ஆண்டில், குழந்தை பிறக்கும்போதான ஆயுட்காலம் பெண்களுக்கு 85.6 ஆண்டுகளாகவும் ஆண்களுக்கு 81.2 ஆண்டுகளாகவும் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 கிருமிப் பரவலால் மரண விகிதம் அதிகரித்ததை அடுத்து, 2020 முதல் 2023 வரையிலான உத்தேச ஆயுட்காலம் பாதிக்கப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது.
2021ஆம் ஆண்டு, சிங்கப்பூர்வாசிகளின் உத்தேச ஆயுட்காலம் வரலாற்றில் முதன்முறையாக வீழ்ச்சி கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.
கிருமிப் பரவலுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்புநோக்க, 2021ல் குழந்தை பிறக்கும்போது அதன் உத்தேச ஆயுட்காலம் ஏறக்குறைய 10 வாரங்கள் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு 83.7 ஆண்டுகளாகப் பதிவான அது, 2021ல் 83.5 ஆண்டுகளாக இருந்தது.