காதல் கசந்துபோனதால் தன்னுடன் வசித்துவந்த ஆடவர் மற்றொரு பெண்ணுடன் மது அருந்தினார் என்ற சந்தேகத்தில் அவரை கத்தியால் குத்திக்கொன்ற மாதுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஙுயென் ங்கொக் கியாவ் என்ற 43 வயது வியட்னாம் நாட்டைச் சேர்ந்த மாது, சம்பவத்தின்போது 51 வயதான திரு சோ வாங் கியோங் என்ற அவரது காதலரை, அவர்கள் வாழ்ந்த வீட்டின் வெளியே 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார். அவர்கள் இருவரும் அங் மோ கியோ அவென்யூ 3ல் இருந்த 5ஆவது மாடி வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். மரணமடைந்தவர் ஒரு சிங்கப்பூர் நிரந்தரவாசியாவார்.
தற்காப்பு வழக்கறிஞர் தரப்பு, மது போதையால் திடீரென ஏற்பட்ட சண்டையில் சம்பவம் நிகழ்ந்தது என்று வாதிட்டது. அதனை நீதிபதி டேடா சிங் கில் நிராகரித்தார். கியாவ் என்ற அந்த மாது திட்டமிட்டுச் செயல்பட்டது, காணொளி ஆதாரங்களில் தெரியவந்ததாக நீதிபதி கூறினார். பொறாமையால் காதலர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டனர் என்ற நீதிபதி, இறுதியில் அவர்களது ‘கூடாக் காதல்’ மரணத்தில் முடிந்துவிட்டது என்றார்.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது, மாது வீட்டின் வெளியே அங்கேயே அமர்ந்திருக்க திரு சோ அவர்மீது விழுந்து கிடந்த நிலையில் காணப்பட்டார். இருவரது உடலிலும் பல கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அதேநாள் காலை 7.15 மணிக்கு திரு சோ மரணமடைந்தது உறுதியானது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், மரண தண்டனையை கோராததால், நீதிபதி ஆயுள் தண்டனையை வழங்கினார்.