தங்கையை வதைத்துக் கொன்ற ஆடவருக்கு ஆயுள் தண்டனை

தங்கையை வதைத்துக் கொன்ற ஆடவருக்கு ஆயுள் தண்டனை

படம்: ஃபேஸ்புக்

05 Nov 2026 - 6:40 pm

1 mins read

கிளமெண்டியில், 19 வயது தங்கையை வதைத்துக் கொன்ற 34 வயது ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஹுவாங் போசான் என்ற அந்த ஆடவர் தனது தங்கை ஹுவாங் பாயிங்கை 11 மாதங்களுக்கும் மேலாகப் பட்டினிபோட்டு அடித்துத் துன்புறுத்தினார்.

கிளமெண்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 1, புளோக் 602ல் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண் 2021ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி மாண்டார்.

கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு, கிருமித்தொற்று மற்றும் பலத்த காயங்களால் அவர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.

இறக்கும் போது அவரது உடல் எடை 27.6 கிலோகிராம் மட்டுமே இருந்தது.

இந்தக் கொடூரக் குற்றச்செயலில் தொடர்புடைய வீட்டின் உரிமையாளர் லிம் பெங் தியோங்கிற்கு (67) கடந்த மே மாதம் 14 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

போசானின் காதலியான சீ மெய் வானும் (47) கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

சீ மெய்க்குக் கீழ் போசான், பாயிங், லிம் ஆகியோர் விற்பனையாளர்களாகச் செயல்பட்டு வந்தனர்.

பாயிங் சரியாக விற்பனைகளை மேற்கொள்ளாததால் மற்ற மூவரும் அவரைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்கள். 2020ஆம் ஆண்டு ஜூன் முதல் அவர்கள் பாயிங்கை பல்வேறு முறையில் துன்புறுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கொலைதுன்புறுத்தல்சிறைத்தண்டனை