நிதித் திட்டமிடுதலை ஊக்குவிக்கும் கண்காட்சி

2 mins read
e1db2c83-f0aa-438e-abed-2986e49188dc
‘லைஃப்’ஸ் சூப்பர்மார்ட்’ (Life’s Supermart) கண்காட்சியில் மத்திய சேம நிதிக் கழகத் தலைமை நிர்வாக அதிகாரி மெலிஸ்ஸா கூ.  - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 
multi-img1 of 2

ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் குறித்துச் சிங்கப்பூரர்களுக்கு எடுத்துரைக்க ‘லைஃப்’ஸ் சூப்பர்மார்ட்’ (Life’s Supermart) எனும் கண்காட்சி, மத்திய சேம நிதிக் கழகத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் 28ஆம் தேதி ‘ஒன் பொங்கோல்’ சமூக மன்றத்தில் நடைபெற்றது. 

பல்பொருள் அங்காடி நிலையமாகக் காட்சியளிக்கும் இதில், வருகையாளர்கள் பொருள்களை வாங்குவது போன்ற அனுபவத்தைப் பெறலாம்.

தனிப்பட்ட வளர்ச்சி, நெருங்கிய பிணைப்புகள், சமூகத்துக்கு உதவி என வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பிரதிபலிக்கும் இந்த லைஃப்’ஸ் சூப்பர்மார்ட்டில் மக்கள் தங்களுக்கு முக்கியமான ஏழு பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம். 

தேவைக்கேற்ப பொருள்களை ‘வாங்கும்’ ஒவ்வொருவருக்கும், வழங்கப்படும் தனிப்பட்ட ரசீதில் அவர்கள் விரும்பும் வாழ்க்கைமுறை, ஓய்வுக்கால நிதித் திட்டங்கள், நிதிக் குறிக்கோள்கள் போன்ற தகவல்கள் இடம்பெறும்.   

மேல்விவரம் அறிய விரும்புவோர் அருகில் அமைந்துள்ள தகவல் காட்சியைப் பார்வையிட்டு மத்திய சேமநிதிக் கழக ஊழியர்கள், தொண்டூழியர்களுடன் உரையாடலாம்.

ஓய்வுக்காலத்துக்கு மத்திய சேமநிதி எவ்வாறு உதவும் என்பது போன்ற தகவல்களைப் பொதுமக்களிடம் எளிதான, ஈர்க்கக்கூடிய வழியில் கொண்டுசேர்க்க இந்தக் கண்காட்சி உதவுகிறது என்றார் மசே நிதிக் கழக வாடிக்கையாளர் சேவை அதிகாரி இஹ்சானா பேகம், 26. 

“இது போன்ற முயற்சிகளின் உதவியோடு தங்கள் நிதித் திட்டங்களை அமைத்துக்கொள்ளப் பொதுமக்கள் முன்வர வேண்டும். இந்த நிதி அறிவு ஒவ்வொருவருடைய எதிர்காலத்துக்கும் மிக உதவியாக இருக்கும்,” என்றார் இஹ்சானா.

தேவைகளுக்கு ஏற்ப பொருள்களை ஒரு பல்பொருள் அங்காடி நிலையத்தில் வாங்குவதுபோல், சிங்கப்பூரர்கள் தங்கள் நிதியைத் தனிப்பட்ட வாழ்க்கைமுறைக்கு ஏற்பத் திட்டமிடுதல் முக்கியம் என்றார் மசே நிதிக் கழகத் தலைமை நிர்வாக அதிகாரி மெலிஸ்ஸா கூ. 

“நிதித் திட்டமிடலுக்குத் தேவையான தகவல்களை அளிப்பதன் மூலம் பொதுமக்கள் தாங்களாகவே அவர்களின் நிதித் தெரிவுகளைச் செய்யும் வல்லமையைப் பெற உதவுவது நோக்கம்,” என்று தெரிவித்தார் மெலிஸ்ஸா. 

‘லைஃப்’ஸ் சூப்பர்மார்ட்’ கண்காட்சியைத் தவிர, செப்டம்பர் 29ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இணைய மோசடிகள் குறித்த விழிப்புணர்வு, மசேநிதி நியமனச் சாவடி, மசேநிதி தொடர்பான உரைகள் போன்றவை இடம்பெறும் எனக் கூறப்பட்டது. 

‘ஒன் பொங்கோல்’ சமூக மன்றம் உட்பட இந்தக் கண்காட்சி, மொத்தம் மூன்று இடங்களில் இடம்பெறும்.

இது குறித்த மேல் விவரங்களுக்கு cpf.gov.sg/LifeSupermart எனும் இணையப்பக்கத்தை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்
மத்திய சேம நிதிகண்காட்சிசிங்கப்பூர்