புதுப்பொலிவுடன் அடுத்த ஆண்டு திறக்கவிருக்கும் சொங் பாங் ஒருங்கிணைந்த சமூக மையத்தில் பேரங்காடி, சந்தை ஆகியவற்றுடன் மூன்று நீச்சல் குளங்களும் ஓடுவதற்குக் கூரையிடப்பட்ட பாதையும் இடம்பெறவுள்ளன.
சொங் பாங் சிட்டி ஒருங்கிணைந்த சமூக மையத்திற்கான கட்டுமானம் நிறைவுபெற்றதைக் குறிக்கும் நிகழ்ச்சியில், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் அதனைத் தெரிவித்தார்.
நீ சூன் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகரான திரு சண்முகம், சனிக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, சோங் பாங் சிட்டி ஒருங்கிணைந்த சமூக மையத்தின் புதிய வசதிகளைப் பற்றி விவரித்தார்.
“வட்டாரவாசிகளுக்கு மேலும் நன்றாகச் சேவையாற்றும் வகையில் அக்கம்பக்க நிலையங்களைப் புதுப்பிப்பதற்கும் வலுப்படுத்துவதற்குமான கடப்பாட்டை சோங் பாங் சிட்டி பிரதிபலிக்கிறது,” என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.
ஒரே கூரையின்கீழ் சமூகத்தை ஒன்றுசேர்த்து விளையாட்டு, வாழ்வியல் வசதிகளை வழங்கும் அந்த மையத்தால், வட்டாரவாசிகளின் தேவைகள் ஆதரிக்கப்படுவதுடன், சமூக உணர்வு மேலும் வலுப்படும் என திரு சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், புதுப்பிப்பால் சுற்றியுள்ள வட்டாரவாசிகளின் வீட்டு மதிப்பு உயரும் எனத் தாம் நினைப்பதாகக் கூறினார்.
“சுற்றியுள்ள கடைக்காரர்களும் வர்த்தகர்களும், திரளும் கூட்டத்தினரால் பயனடைவர்,” என்றும் அவர் கூறினார்.
ஒருங்கிணைந்த மையத்திற்கான கட்டுமானத் திட்டம், முதன்முதலாக செப்டம்பர் 2020ல் அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, சொங் பாங் சமூக மன்றம் இருந்த அந்த இடம், ஈசூன் ரிங் ரோட்டுக்கும் புளோக் 102, ஈசூன் அவென்யு 5க்கும் இடையே உள்ளது.
நீச்சல் குளங்களில் சக்கர நாற்காலிகளுக்கான சாய்வு மேடைகள், உடை மாற்றும் அறையில் உயரத்தை மாற்றக்கூடிய படுக்கைகள் போன்ற அனைவரையும் ஒருங்கிணைக்கும் வசதிகள் அந்த வளாகத்தில் அமைந்திருக்கும்.
1984ல் கட்டப்பட்டு பின்னர் 2003ல் புதுப்பிக்கப்பட்ட சொங் பாங்பேரங்காடியையும் உணவு நிலையத்தையும் சேர்ந்த கடைக்காரர்கள் புதிய மையத்திற்கு இடம் மாறுவர்.
புதிய மையத்தில் கிட்டத்தட்ட 58 உணவுக் கடைகளும் 123 சந்தைக் கடைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

