தமிழ் முரசு நாளிதழ் 90 ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தின் விழிப்புணர்வையும் வளர்ச்சியையும் வழிநடத்தும் முதன்மையான ஊடகமாகத் திகழ்ந்து வருகிறது.
மக்களின் குரலாக, பல்வேறு துறைகளில் பங்களித்து வந்தவர்களின் பணிகள் மக்கள் மத்தியில் வெளிச்சம் பெற வாய்ப்பளித்து வருகிறது தமிழ் முரசு.
இப்பதிவு அத்தகைய செய்தி நாயகர்களின் பயணத்தையும் தமிழ் முரசு அவர்களுக்கு அளித்த ஒளியையும் காண்கிறது.
சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மாலதி நாகரத்தினத்தின் மீள்திறன்மிக்க பயணத்தை தமிழ் முரசு செய்தியாக வெளியிட்டிருந்தது. இளவயதிலேயே நீரிழிவால் பாதிக்கப்பட்டு வந்த அவரின் கதையைப் படித்த வாசகர்கள் பலர் தமது நோயைப் பற்றி அறிந்துகொண்டதாகவும் தமது கதை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் கூறினார் மாலதி.
இளவயதிலேயே குண்டர் கும்பலில் சேர்ந்து பல பிரச்சினைகளில் சிக்கி சிறைக்குச் சென்று வந்தவர் டேவிட் கிங் துரைராஜன், 43.
இவரின் கதையை பல முன்னாள் கைதிகளுக்கும் இந்தியச் சமூகத்தினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முனைப்பில் தமிழ் முரசு வெளியிட்டிருந்தது. தமது கதையைப் படித்து பலர் தம்மைப் பாராட்டியதாகவும் இவ்வாண்டிற்கான மக்கள் கவிஞர் மன்றத்தின் உழைப்பாளர் விருது தமக்கு வழங்கப்பட்டதாகவும் சொன்ன டேவிட், தமிழ் முரசுக்கு நன்றி தெரிவித்தார்.
சேம்ராஜ் ஆசீர் ஜெயராஜ், 48, தம் மகனின் மதியிறுக்கப் பயணத்தை தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
தமிழ் முரசில் கதை வெளியான பிறகு பலர் தம் மகனைப் பற்றி அறிந்துகொள்ளத் தொடங்கியதாகவும் மதியிறுக்கம் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்பட்டதாகவும் ஆசீர் தெரிவித்தார்.
அத்துடன், தமிழ் முரசு பேட்டிக்குப் பிறகு தம் மகனுக்கு இன்னும் கூடுதலாக செய்ய வேண்டுமென்ற உந்துதலும் தமக்கு வந்ததாக அவர் கூறினார்.
நோய் வாட்டியபோதும், விரலை இழந்த பின்னரும் பிறருக்குச் சுவையான உணவு சமைத்துத் தரும் 66 வயது வள்ளியம்மை சத்தியப்பனின் கதை, அன்னையர் தினத்தை முன்னிட்டு அண்மையில் வெளியானது.
பலர் தமது கதையைப் படித்துவிட்டு தம்மைப் பாராட்டியதாகவும் இன்னும் அதிகமாக சமைக்க தாம் ஊக்கம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இல்லப் பணிப்பெண் கமலா ராஜேந்திரன், லிட்டில் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக உணவு சமைத்துத் தரும் செய்தியை தமிழ் முரசு வெளியிட்டிருந்தது. தமது கதையைப் படித்துப் பூரித்துப்போன கமலா, அதன் பிறகு இன்னும் பலருக்கு அதிகம் உதவ வேண்டுமென்ற ஊக்கம் பிறந்துள்ளதாகச் சொன்னார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உற்ற நண்பனாக இருந்து அவர்களுக்கு, குறிப்பாக கொவிட்-19 காலத்தில் உதவிய லெட்சுமணன் முரளிதரன், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் மே தின விருதுக்காக தமிழ் முரசு செய்தியில் இடம்பெற்றார். முரசில் வெளிவந்த கதையை இந்தியாவில் இருக்கும் தம் உறவினர்கள் கண்டு பாராட்டியதாகச் சொன்ன அவர், பலர் தமது கதையைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டதாகவும் பணியிடத்தில் தாம் நன்கு அறியப்பட்டதாகவும் கூறினார்.