தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தியாக ஒளி வீசும் நேசத் தீபாவளி 2025

குடும்ப நலன் காக்கும் ஊழியரின் கொண்டாட்டங்கள்

3 mins read
3e40ab3d-f362-41a2-8122-23048755bf86
தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் காணொளி வழி பேச முடிவது கடல் கடந்து வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பெரும் வரமாக உள்ளது. - வரைபடம்: பிரசாந்தி

பல மாதங்களாகக் காணாத உறவுகளைக் கூடத் தீபாவளி அன்று தேடிச்சென்று சந்திப்போரிடையில், தங்கள் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக, அவர்களைப் பிரிந்து கொண்டாட்டங்களை விட்டுக்கொடுத்து நிறைவு காண்கின்றனர் பல வெளிநாட்டு ஊழியர்கள். காணொளி வாயிலாகக் குடும்பத்தினரைப் பார்த்து, நண்பர்களுடன் கொண்டாடும் தங்கள் தீபாவளி பற்றிச் சிலர் இங்கே பகிர்ந்துகொள்கின்றனர்.

குடும்பத்தினர் மகிழ்ச்சியில் நிறைவு

சிங்கப்பூரில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் திரு மும்மூர்த்தி நாராயணசாமி, 39 தீபாவளியை தம் நண்பர்களுடன் சிங்கப்பூரிலேயே கொண்டாடுகிறார்.

மும்மூர்த்தி நாராயணசாமி.
மும்மூர்த்தி நாராயணசாமி. - படம்: நாராயணசாமி

இவரது பூர்வீகம் பாண்டிச்சேரி. திருமணமாகி ஆறு வயதில் இரட்டை ஆண்பிள்ளைகள் உள்ளனர். சிங்கப்பூரில் வேலை பார்ப்பதால் சொந்த ஊரில்  குடும்பத்தினரை ஆதரிக்க முடிகிறது என்றபோதிலும், அவர்களைப் பார்க்காமல் இருப்பது வருத்தம்தான் என்றார் திரு சாமி.

‘‘பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என என் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பதில் பல இன்னல்கள் இருந்தாலும், அவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே என் ஒரே நோக்கம். 

‘‘அவர்கள் அங்கு ஒன்றுசேர்ந்து கொண்டாடுவதை கைப்பேசியில் பார்த்தபடியே என் தீபாவளி நாளைக் கழித்துவிடுவேன்,’’ என்றார் திரு சாமி.

நண்பர்கள் சங்கமம்

சிலருக்கு தீபாவளி நண்பர்களோடு உறவாடி மகிழும் சங்கமமாக அமைந்துள்ளது.

“இவ்வாண்டு நாங்கள் மலேசியாவின் பத்துமலைக்குச் சென்று முருகனைக் கும்பிட்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளோம்,” என்றார் சிவகங்கையைச் சேர்ந்த திரு ராஜு, 32.

‘‘25 ஆண்டுகளுக்குமுன் ஒன்றாகப் படித்தவர்கள் அனைவரும் தீபாவளியன்று ஒன்றுகூடலாம் என யோசனை செய்தோம். 12 பேர் இங்கிருக்கிறோம். தீபாவளியை ஒன்றாகக் கொண்டாடுகிறோம்,” என்றார் திரு ஆனந்த், 41.

இடமிருந்து: திரு ராஜு, திரு ஆனந்த்.
இடமிருந்து: திரு ராஜு, திரு ஆனந்த். - படம்: ரவி சிங்காரம்

தீபாவளி அன்று லிட்டில் இந்தியாவில் உள்ள  கோவிலுக்குச் சென்று இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழமை என்றாலும், அண்டை நாட்டிலுள்ள ஆலயங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை நெடுநாளாக உள்ளது என்றார் திரு கோபிநாத், 38.

‘‘பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் திட்டமிட்டுவருகிறோம்; ஆனால் சாத்தியப்படவில்லை. நேரம் கிடைக்காது அல்லது திடீரென வீட்டிற்குப் பணம் அனுப்பவேண்டியிருக்கும்,” என்றார் திரு கோபிநாத்.

சொந்த ஊரிலிருந்து அண்மையில் சிங்கப்பூர் திரும்பிய திரு சசிராஜா இங்குள்ள குட்டித் தீவுகளுக்கோ இந்தோனீசியாவுக்கோ சென்று தீபாவளியைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தார்.

இடமிருந்து: திரு கோபிநாத், திரு சசிராஜா.
இடமிருந்து: திரு கோபிநாத், திரு சசிராஜா. - படம்: ரவி சிங்காரம்

அனைத்து ஏற்பாடுகளையும் செய்தபின் அவருடன் வரவிருந்த நண்பர் வார இறுதியிலும் தீபாவளியன்றும் வேலைசெய்யவேண்டிய சூழல் எழுந்ததால் அவரின் திட்டம் ரத்தானது.

“என் ஊர் சிவகாசி - தீபாவளிப் பட்டாசுக்கு மிகவும் புகழ்பெற்ற ஊர். தீபாவளிக்கு நான் தேக்கா சென்று நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பேன்,” என்றார் திரு சசிராஜா, 35.

தேக்கா சென்று விட்டாலே தீபாவளி உணர்வு மலர்ந்துவிடும் என்று விவரித்தார் இவர்.

குடும்பத்துக்காகக் குடும்பத்தினரை பார்க்கச் செல்லவில்லை

சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார் திரு கோபால் பாலமுருகன், 36. பிறந்து 7 மாதமேயான பெண் குழந்தையை இதுவரை  கைப்பேசித் திரையில் மட்டுமே பார்த்துக் கொஞ்சி மகிழும் இவருக்கு இந்த ஆண்டு தீபாவளி தங்கும் விடுதியில்தான்.

திரு கோபால் பாலமுருகன்
திரு கோபால் பாலமுருகன் - படங்கள்: கோபால் பாலமுருகன்
குடும்பத்தினருடன் திரு கோபால் பாலமுருகன்.
குடும்பத்தினருடன் திரு கோபால் பாலமுருகன். - படங்கள்: கோபால் பாலமுருகன்.

‘‘அரியலூரின் கழுமங்கலம் எனும் ஊரிலிருந்து சிங்கப்பூருக்குப் பணியாற்ற வந்தேன். மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட ஆசைதான். என்றாலும் பிள்ளைகளுக்குச் சிறப்பான எதிர்காலம் அமைத்துத் தர வேண்டும். அதனால், சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடாமல் உழைப்பது மிக முக்கியம்,” என்றார் அவர்.

‘‘இது சுகமான சுமைதான். தீபாவளியன்று என் மழலை மகளைக் கையிலேந்தியபடியே மனைவியும், புத்தாடை அணிந்து புன்னகை பூக்க மூத்த மகளும் பேசுவார்கள்.

மழலையின் முகத்தைப் புகைப்படத்திலும் கைப்பேசித் திரையிலும் பார்த்தவாறே தீபாவளி நன்னாளை செலவிடுகிறார் திரு கோபால் பாலமுருகன்.
மழலையின் முகத்தைப் புகைப்படத்திலும் கைப்பேசித் திரையிலும் பார்த்தவாறே தீபாவளி நன்னாளை செலவிடுகிறார் திரு கோபால் பாலமுருகன். - படங்கள்: கோபால் பாலமுருகன்.

‘‘கைப்பேசியில் அவர்களைப் பார்க்கையில் நான் இன்று விட்டுக்கொடுக்கும் கொண்டாட்டங்களுக்குப் பின் இருக்கும் ஆழ்ந்த அர்த்தம் புரியும்.

‘‘அந்த நினைவிலேயே நல்ல நாள்கள் வெகுவிரைவில் மலரும் என்ற நம்பிக்கையுடன் என் விழாக்காலம் மேலும் சிறப்புப் பெறும்,’’ என்றார் திரு பாலமுருகன்.

குறிப்புச் சொற்கள்