லிட்டில் இந்தியாவின் கிளைவ் ஸ்திரீட்டில் மண்மணம் கமழும் பொங்கல் ஒளியூட்டு விழா களைகட்டியது.
பிற்பகல் முதல் இடைவிடாது மழை பெய்த போதிலும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஏற்பாடு செய்திருந்த பொங்கல் ஒளியூட்டு விழாவைக் காண மக்கள் ‘பொலி’ திறந்தவெளியில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் திரண்டனர்.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) மாலை தொடங்கிய ஒளியூட்டு விழாவைச் சுகாதார மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலே ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர்.
“மழை விடாமல் பெய்வது நம்மில் பலருக்கு இடையூறாக இருந்தாலும், மழையின்றி வேளாண்மை இல்லை. மழை நம் அனைவரையும் இங்கு இன்று இணைத்துள்ளது. லிட்டில் இந்தியாவுக்கு ஒரு கலாசாரத் தூணாக லிஷா விளங்குகிறது. இவர்களின்றி நம்மால் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்க இயலாது.
“இளையர்களை ஈர்க்கும் வகையில் லிஷா அமைத்த இளையர் பிரிவும் பாராட்டத்தக்கது. உலகில் நிகழும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு இடையில் நாம் ஒற்றுமையாக இருந்து நம் கலாசார வேர்களுடன் நிற்க வேண்டும்,” என டாக்டர் ஜனில் தமது சிறப்புரையில் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டு லிஷாவின் 25வது ஆண்டு விழா கொண்டாட்டமும் எஸ்ஜி 60 கொண்டாட்டமும் இணைந்திருப்பதால் முன்பில்லாத வகையில் பொங்கல் பண்டிகைக்காக ஏராளமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் டாக்டர் ஜனில் பாராட்டினார்.
“இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டம் சற்று மாறுபட்டது. மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுவதால் நாங்கள் பொங்கல் நிகழ்ச்சிகளை வேறு விதத்தில் திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் அவற்றில் கலந்துகொண்டு இன்புற வேண்டும்,” என்று லிஷா தலைவர் ரகுநாத் சிவா கூறினார்.
நிகழ்ச்சி இடம்பெற்ற கூடாரத்தில் விக்னேஷ் பால் பண்ணையிலிருந்து வந்திருந்த கால்நடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
ஒளியூட்டு நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து வந்திருந்த கிராமியக் கலைஞர்கள் அவர்களின் நடனத்தாலும் இசையாலும் மக்களைக் குதூகலப்படுத்தி மேலும் அதிகமானோரை நிகழ்ச்சிக்கு வரவேற்றனர்.
பிப்ரவரி 10ஆம் தேதி வரை லிட்டில் இந்தியாவில் ஒளித்தோரணைகள் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மின்னவுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பற்றிய மேல்விவரங்களுக்கு https://pongal.sg/ இணையத்தளத்தை நாடலாம்.