‘காம்லிங்க் பிளஸ்’ குடும்பங்களில் பாதி நிலைத்தன்மை அடைந்துள்ளன

வாழ்வாதாரத்தில் முன்னேற்றம்

‘காம்லிங்க் பிளஸ்’ குடும்பங்களில் பாதி நிலைத்தன்மை அடைந்துள்ளன

படம்: சாவ்பாவ்

16 Nov 2026 - 6:12 pm

3 mins read

‘காம்லிங்க் பிளஸ்’ திட்டத்தால் ஆதரிக்கப்படும் 11,006 குறைந்த வருமானக் குடும்பங்களில் 49 விழுக்காட்டுக் குடும்பங்கள், 2025ல் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை அடைந்துள்ளன. இவ்விகிதம் 2024உடன் ஒப்பிடுகையில் ஐந்து விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம்.

2025ல் நிலைத்தன்மை அடைந்த ‘காம்லிங்க் பிளஸ்’ குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டு புள்ளிகள் உயர்ந்துள்ளன.
2025ல் நிலைத்தன்மை அடைந்த ‘காம்லிங்க் பிளஸ்’ குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டு புள்ளிகள் உயர்ந்துள்ளன. - படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

திங்கட்கிழமை (நவம்பர் 16) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட ‘குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் போக்குகள் அறிக்கை’ இதைத் தெரிவித்துள்ளது.

வேலை, வருமான பாதுகாப்பு, பிள்ளைகளின் வளர்ச்சி, கல்வி, வீட்டுவசதி, குடும்பச் செயல்பாடு, சுகாதாரம், நிதி மீள்திறன் ஆகிய ஆறு வாழ்வியல் அம்சங்களைக் கொண்டு நிலைத்தன்மை கணிக்கப்பட்டது.

ஆகக் குறைந்த வருமானம் ஈட்டும் 10 விழுக்காட்டுக் குடும்பங்களில் ஒவ்வொரு உறுப்பினரின் மாத வருவாய் 12.8 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அக்குடும்பங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள 10 விழுக்காட்டுக் குடும்பங்களில் வருவாய் உயர்வு 9.7 விழுக்காடாக இருந்தது. அவ்விகிதங்கள், தேசிய இடைநிலை குடும்ப வருவாய் வளர்ச்சி விகிதமான 7.5 விழுக்காட்டுக்கும் அதிகமானவை.

குடும்பங்களின் வளர்ச்சியுடன் ‘காம்லிங்க் பிளஸ்’ திட்டமும் வளர்ந்துள்ளது. 2024ல் 10,219 குடும்பங்களை ஆதரித்து வந்த அத்திட்டம், 2025ன் முடிவில் 11,006 குடும்பங்களுக்கு ஆதரவளித்தது.

அக்குடும்பங்கள் வருவாய் பாதுகாப்பில் ஆக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. 2024ல் சமுதாய முன்னேற்றம் அடைந்த குடும்பங்களின் விகிதம் 28 விழுக்காடாக இருந்தது. அவ்விகிதம் 2025ல் 36 விழுக்காடாக உயர்ந்தது.

குறைந்தது ஆறு மாதங்கள் வேலை செய்தல், முக்கிய நிதியுதவி பெறாமல் இருத்தல், வருமானம் வளர்ச்சி அடைதல் போன்றவற்றின் அடிப்படையில் சமுதாய முன்னேற்றம் நிர்ணயிக்கப்படுகிறது.

அவ்விரு ஆண்டுகளுக்கிடையே திட்டத்தில் இடம்பெற்ற குடும்பங்களின் இடைநிலை குடும்ப வருமானம் 31 விழுக்காடு உயர்ந்தது.

பாலர்பள்ளி செல்லும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் 31 விழுக்காட்டுக் குடும்பங்கள், தங்கள் பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டதை உறுதிசெய்துள்ளன.

அதோடு, அவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுவதையும் குறைந்தது 75 விழுக்காட்டுப் பள்ளி வருகை பதிவாகி இருப்பதையும் குடும்பங்கள் உறுதிசெய்துள்ளன.

அத்தகைய குடும்பங்களின் விகிதம் 2024லிருந்து மூன்று விழுக்காட்டுப் புள்ளிகள் உயர்ந்தன.

72 விழுக்காட்டுக் குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளிக்குப் பிந்தைய கல்வி நிலையங்களுக்குத் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

12 மாதங்களுக்கு மருத்துவமனையிலோ விபத்து, அவசர உதவிப் பிரிவிலோ அனுமதிக்கப்படாமல், மூன்று வயதிற்குள் அனைத்துப் பிள்ளைகளுக்கும் அத்தியாவசிய தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்து சுகாதார நிலைத்தன்மையை அடைந்த குடும்பங்களின் விகிதம் 88 விழுக்காடு.

குடும்ப வன்முறைக்கு ஆளாகாமல் 88 விழுக்காட்டுக் குடும்பங்கள் பாதுகாப்பாக இருந்தன.

வாடகை வீடுகளிலிருந்து 206 குடும்பங்கள் சொந்த வீடுகளுக்கு மாறியுள்ளன. ஏழு விழுக்காட்டுக் குடும்பங்கள் தங்களுக்கான சொந்த இல்லங்களைப் பதிவு செய்துள்ளன.

உயர்ந்துவரும் முன்னேற்ற விகிதங்கள், நீண்டகால குடும்ப பயிற்சியின் வெற்றியைக் கோடிகாட்டுவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

2023ல் திட்டம் தொடங்கப்பட்டபோது இணைக்கப்பட்ட குடும்பங்களின் வளர்ச்சி அதற்கு தக்க சான்றாக விளங்குவதாக அமைச்சு நம்புகிறது.

அம்முன்னோடி குடும்பங்களில் பாதி 2025ல் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை அடைந்துள்ளன. வருவாய் பாதுகாப்பும் சமூக மேம்பாடும் அடைந்த குடும்பங்களின் விகிதம் 34 விழுக்காடு.

பாலர்பள்ளி சுயசார்புத்தன்மை 2023லிருந்த 15 விழுக்காட்டிலிருந்து இரட்டிப்பாக உயர்ந்தது. வீட்டு உரிமை விகிதம் பூஜ்ஜியம் விழுக்காட்டிலிருந்து நான்கு விழுக்காடாக உயர்ந்தது.

தற்காலிக நிதி உதவியும் நீண்ட கால சமூக உதவியும் இம்முன்னேற்றங்களுக்கான முக்கிய காரணங்களென அமைச்சு கருதுகிறது.

திட்டத்தின் வெற்றியை அவ்விகிதங்களின் வளர்ச்சிகள் ஒருபுறம் குறிக்க, வேறு சில விகிதங்களின் சரிவும் அதை எடுத்துக்காட்டுவதாக அமைச்சு தெரிவித்தது.

தற்காலிக, நடுக்கால நிதி உதவி கோரும் குடும்பங்களின் எண்ணிக்கை 2024லிருந்து 6.5 விழுக்காடு குறைந்தது. நெடுங்கால நிதியுதவித் திட்டத்திலிருந்த குடும்பங்களின் எண்ணிக்கையும் 3,240லிருந்து 2,997ஆகக் குறைந்தது.

உதவிபெறும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் 2025ல் அமைச்சு அதன் உதவித்தொகையை உயர்த்தியதால் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த நிதியுதவி அதிகரித்தது.

தற்காலிக, நடுக்கால உதவித்திட்டத்தின்கீழ் 2024ல் வழங்கப்பட்ட $94 மில்லியன், 2025ல் $95.8 மில்லியனாக உயர்ந்தது. நெடுங்கால நிதியுதவித் திட்ட தொகை $21.4 மில்லியனிலிருந்து $22.4 மில்லியனாக உயர்ந்தது.

2022ல் தற்காலிக, நடுக்கால நிதி உதவித்திட்டத்திலிருந்து விடைபெற்ற 54 விழுக்காட்டுக் குடும்பங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் திட்டத்தில் இணைந்துவிட்டன.

‘குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் போக்குகள் அறிக்கை’ குறைந்த வருமானக் குடும்பங்களின் நிலைத்தன்மை, தர்சார்புதன்மை, சமூக மேம்பாடு ஆகியவற்றைக் கணக்கெடுக்கிறது.

குறிப்புச் சொற்கள்