நீரிழிவு, உடற்பருமனால் அதிகரிக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

சரியான உணவுமுறையும் நல்ல உடற்பயிற்சியும் முக்கியம்

நீரிழிவு, உடற்பருமனால் அதிகரிக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

2 mins read
2025ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 32 பேருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
1d4a9973-9561-4593-96c8-d656ca64423c
2024ஆம் ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 60 வயது லியன் பூ கிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உடற்பருமனாலும் நீரிழிவாலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அதிகரித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கிருமித் தொற்றால் ஏற்படக்கூடிய ‘ஹெபடைட்டிஸ் பி’ காரணமாகச் சிங்கப்பூரில் அதிகமானவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டனர். ஆனால், இப்போது நிலைமை மாறியுள்ளது.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 1,200 பேர் ‘சிரோசிஸ்’ என்று அழைக்கப்படும் கல்லீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரிவில் உள்ளதாக சிங்ஹெல்த் தரவுகள் கூறுகின்றன.

மோசமான ‘சிரோசிஸ்’ நிலைமை காரணமாகக் கல்லீரலில் கொழுப்பு அதிகமாகப் படிந்து அதில் வீக்கம் ஏற்படும். இதனால், சுத்திகரிப்பு செய்யும் திறனைக் கல்லீரல் இழக்கும்.

2015ஆம் ஆண்டு தரவுப்படி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் 63.3 விழுக்காட்டினர் ‘ஹெபடைட்டிஸ் பி’ பிரச்சினையை எதிர்நோக்கியவர்கள். மோசமான ‘சிரோசிஸ்’ காரணமாக 1.8 விழுக்காட்டினர் மட்டுமே அதற்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.

ஆனால், 2024ஆம் ஆண்டு தரவுபடி, மோசமான ‘சிரோசிஸ்’ நிலைமை காரணமாக 39.8 விழுக்காட்டினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். அதேநேரம், ‘ஹெபடைட்டிஸ் பி’ பிரச்சினையை எதிர்நோக்கியவர்களில் 23.5 விழுக்காட்டினர் மட்டுமே அதற்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.

இதுகுறித்து சிங்ஹெல்த் அமைப்பின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் பிரையன் கோ, “ அண்மை ஆண்டுகளாக உலக அளவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வளர்ந்த நாடுகளில் அந்த எண்ணிக்கை கூடியுள்ளது. இதற்கு உடற்பருமனும் நீரிழிவுமே முக்கியக் காரணம்,” என்றார்.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் உறுப்பு மாற்றுச் சிகிச்சை நிலையமும் மற்ற பொது மருத்துவமனைகளும் கல்லீரலில் அதிகமாகக் கொழுப்பு படிந்திருப்பது, ‘ஹெபடைட்டிஸ் பி’ ஆகியவை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முக்கியக் காரணங்களாக இருப்பதாகக் கூறுகின்றன.

‘ஹெபடைட்டிஸ்’ கிருமிப்பரவல் தடுப்பூசி கொண்டு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், உடற்பருமன், நீரிழிவு ஆகியவை ஒருவரின் வாழ்க்கைமுறை சார்ந்தது.

உலக அளவில் திரட்டப்பட்ட தரவின்படி, பெரியவர்களில் 38 விழுக்காட்டினருக்குக் கல்லீரலில் அதிகமாகக் கொழுப்பு படிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலை, கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்தாக மாறும். பாதிப்பு முற்ற கிட்டத்தட்ட 20 முதல் 30 ஆண்டுகள் எடுக்கும்.

மது அருந்தாமல் இருப்பது, சரியான உணவுமுறை, நல்ல உடற்பயிற்சி ஆகியவை கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

2025ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 32 பேருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்