தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் காற்பந்துத் திருவிழாவில் லிவர்பூல் உள்ளிட்ட ஐந்து முன்னணி ஐரோப்பியக் குழுக்கள்

2 mins read
770be288-dc36-40f1-9d60-596db27e3dd8
சிங்கப்பூர் காற்பந்துத் திருவிழாவில் பங்குகொள்ளும் குழுக்களைப் பிரதிநிதித்த முன்னாள் வீரர்கள் (இடமிருந்து) ஜான் பார்ன்ஸ் (லிவர்பூல்), ஜியோவான் எல்பர் (பயர்ன் மியூனிக்), மார்க்கோ கஸெட்டி (ரோமா), எமில் ஹெஸ்கி (லெஸ்டர் சிட்டி), கேரி மபுட் (ஸ்பர்ஸ்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் காற்பந்து ரசிகர்களுக்கு வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாபெரும் காற்பந்து விருந்து காத்திருக்கிறது.

முதன்முறையாக இடம்பெறவிருக்கும் சிங்கப்பூர் காற்பந்துத் திருவிழாவில் லிவர்பூல், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், லெஸ்டர் சிட்டி (மூன்றும் இங்கிலாந்து), பயர்ன் மியூனிக் (ஜெர்மனி), ரோமா (இத்தாலி) ஆகிய ஐந்து முன்னணி ஐரோப்பியக் காற்பந்துக் குழுக்கள் பங்கேற்கவிருக்கின்றன.

தேசிய விளையாட்டரங்கில் இந்த ஒருவாரக் காற்பந்துத் திருவிழா நடைபெறும்.

ஜூலை 26ஆம் தேதி நடக்கவிருக்கும் முதல் ஆட்டத்தில் டைகர் கிண்ணத்திற்காக ஸ்பர்ஸ்-ரோமா குழுக்கள் மோதும்.

அதன்பின் ஜூலை 30ஆம் தேதி நடக்கவுள்ள ஆட்டத்தில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் கிண்ணத்திற்காக லெஸ்டர்-லிவர்பூல் குழுக்கள் பொருதும். ஆகஸ்ட் 2ஆம் தேதி நடக்கும் சிங்கப்பூர் கிண்ணப் போட்டியில் லிவர்பூல், பயர்ன் குழுவை எதிர்த்தாடும்.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூருக்கு வருகை தரவுள்ளது லிவர்பூல் குழு. கடந்த ஜூலையில் தேசிய விளையாட்டரங்கில் ஏறக்குறைய 50,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த ஆட்டத்தில் அக்குழு 2-0 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸ் குழுவைத் தோற்கடித்தது.

அதுபோல, 2017ஆம் ஆண்டு இங்கு நடந்த அனைத்துலக வெற்றியாளர்கள் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க பயர்ன் இங்கு வந்திருந்தது. ஸ்பர்ஸ் குழு கடைசியாக 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் விளையாடியது.

ரோமா, லெஸ்டர் குழுக்கள் சிங்கப்பூர் வருவது இதுவே முதன்முறை.

இப்போட்டிகளுடன் ஜூலை 25ஆம் தேதி ஸ்பர்ஸ் குழுவும் ஜூலை 29ஆம் தேதி லிவர்பூல் குழுவும் பயிற்சியில் ஈடுபடுவதையும் ரசிகர்கள் காணலாம். அதுபோல், பயர்ன் குழுவும் ஆகஸ்ட் 1ஆம் தேதி பயிற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஆதரவில் இந்தக் காற்பந்துத் திருவிழா இடம்பெறவுள்ளது.

https://premier.ticketek.com.sg/shows/show.aspx?sh=SFFUM என்ற இணையப்பக்கம் வழியாக இம்மாதம் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நுழைவுச்சீட்டு விற்பனை தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்