தாவோ சமய வழமைகளைப் பின்பற்றும் 82 வயது ஆடவர் ஒருவரின் உடலுக்கு கிறிஸ்துவ சமய முறைப்படி ஈமச்சடங்குச் செய்து எரியூட்டிய ஈமச்சடங்கு நிறுவனங்களுக்கு எதிராக அவரது குடும்பத்தார் வழக்கு தொடுத்துள்ளனர்.
காலஞ்சென்ற திரு கீ கின் தியோங்கின் உடல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஹார்மனி ஃபியூனரல் கேர் நிறுவனத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டது. திரு சியா சூன் சுவான் என்ற மற்றொரு நபர் என்று தவறாகக் கருதப்பட்டு திரு கீயின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
திரு சியாவுக்குச் செய்யவேண்டிய கிறிஸ்துவ சமய முறைப்படியான ஈமச் சடங்குகள் திரு கீக்குச் செய்யப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
தாவோ சமய வழமைப்படி ஈமச் சடங்குகளை நடத்துவதற்கு உடல் ஏதும் இல்லை என்று குடும்பத்தினர் கூறினர்.
திரு கீயின் பிள்ளைகளும் அவரது பேத்தியும் $225,000 இழப்பீடு கோருகின்றனர். அதோடு அவர்கள் மனநல ஆலோசனைகளுக்குக் கிட்டத்தட்ட $2,260உம், “எதிர்கால துக்க சிகிச்சை’க்கு $14,000உம் இழப்பீடு கோருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகக் கடும் துயரத்தை அனுபவித்திருப்பதாக அவர்கள் கூறினர்.
ஃபோர்டிஸ் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூ வோங், யூனிஸ் சுவா, பேட்ரிக் டான் ஆகியோர் அக்குடும்பத்தினரைப் பிரதிநிதிக்கின்றனர்.


