எரிசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திரவ இயற்கை எரிவாயு: டான் சீ லெங்

2 mins read
b58ee1cf-b88b-403e-b36d-9e435b9d0290
படம்: - தமிழ் முரசு

திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) வணிகர்கள் உட்பட அனைத்துலக எரிசக்தி வணிகர்களை சிங்கப்பூரில் தொழில்புரிய தொடர்ந்து வரவேற்பதாக வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

கரிமநீக்கத்திற்கான தனது முயற்சிகளை சிங்கப்பூர் இரட்டிப்பாக்கியுள்ளது என்றும் இதன்மூலம் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் திறன்கொண்ட நாடாக மாற வேண்டும் என்னும் அதன் இலக்கை அடைய முடியும் என்றும் அமைச்சர் டான் கூறினார்.

எரிசக்திப் பாதுகாப்பு, கரிமநீக்கம் என்ற இரண்டு இலக்குகளையும் எட்டுவது என்பது பல நாடுகளுக்கும் சவாலானதாக இருக்கும் என்றார் அவர்.

இத்தகைய சூழலில், ஹைட்ரஜன் போன்ற கரிமமில்லா எரிபொருள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்வரை இயற்கை எரிவாயு ஒரு நம்பகமான ஆற்றலாக இருக்கும் என்று திரு டான் குறிப்பிட்டார்.

‘கேஸ்டெக் 2023’ கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு பேசினார்.

புதுப்பிக்கத்தக்க எரிபொருளைப் பயன்படுத்துவதற்குச் சிங்கப்பூர் நடைமுறைக்கேற்ற அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக திரு டான் கூறினார்.

ஆசியாவில் திரவ இயற்கை எரிவாயு வணிகத்திலும் அதனைச் சேமிப்பதிலும் சிங்கப்பூர் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதாக அவர் சொன்னார்.

2050ஆம் ஆண்டுக்குள், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் இயற்கை எரிவாயுப் பயன்பாடு இரட்டிப்பாகும் என்றும் அது 1,600 பில்லியன் கனமீட்டரைவிட அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்போதைக்கு உலகின் முன்னணிப் பத்து எரிசக்தி வணிகர்கள் உட்பட மொத்தம் 60 திரவ இயற்கை எரிவாயு வணிகர்கள் சிங்கப்பூரில் செயல்பட்டு வருகின்றனர். 240 பில்லியன் அமெரிக்க டாலர் (S$326 பி.) மதிப்புடைய திரவ இயற்கை எரிவாயு வணிகம் சிங்கப்பூர் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

இது, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியளவு என்பது குறிப்பிடத்தக்கது.

‘எஸ்எல்என்ஜி’ நிறுவனத்தால் நடத்தப்படும் சிங்கப்பூரின் திரவ இயற்கை எரிவாயு முனையம் கடந்த 2013ஆம் ஆண்டு தனது செயல்பாட்டைத் தொடங்கியது. அதனால் இப்போது ஆண்டிற்கு 9.6 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவைக் கையாள முடியும்.

இந்நிலையில், உள்நாட்டு மின்சாரத் தேவை அதிகரிப்பையும் வட்டார எரிவாயு வணிகத்தையும் கருத்தில்கொண்டு, சிங்கப்பூரின் திரவ இயற்கை எரிவாயு உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று மனிதவள அமைச்சருமான டாக்டர் டான் கூறினார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் உலகப் பேராளர்கள், கொள்கை வகுப்பவர்கள் உட்பட 4,000 பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாடு செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்