சுவா சூ காங் வட்டாரத்தில் கடன் முதலைத் தொல்லை இழைத்ததாக நம்பப்படும் 27 வயது ஆடவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கைது செய்யப்பட்டார்.
சூவா சூ காங் ஸ்திரீட் 62ல் உள்ள ஒரு வீட்டிலிருந்து இம்மாதம் 18ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் இதுகுறித்துத் தங்களுக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
“அந்த வீட்டுக்கு அருகே சுவரில் கடன் முதலைகள் சம்பந்தப்பட்ட கிருக்கல்கள் (graffiti) இருந்தன,” என்று காவல்துறை கூறியது.
“சுவா சூ காங், பணம் பெற்றுக்கொண்டால் திரும்பித் தாருங்கள்!!! இது முதல் முறை,” என்ற பொருளைக் கொண்ட ஆங்கில வார்த்தைகளில் மிரட்டல், கிருக்கல்களில் இருந்தது காவல்துறை வெளியிட்ட படத்தில் தெரிந்தது.
காவல்துறை கேமராக்களின் உதவியோடு ஜூரோங் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இச்செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரை அடையாளம் கண்டனர். சிங்கப்பூர் முழுவதும் அந்த ஆடவர் பல்வேறு கடன் முதலைத் தொல்லை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
புதன்கிழமை (டிசம்பர் 24) அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று ஏஷியாஒன் ஊடகம் தெரிவித்தது.

