ஜாலான் புக்கிட் மேரா வட்டாரத்தில் கடன்முதலைத் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 32 வயது கார்த்திக் ராவ் கங்கையா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 15ஆம் தேதியன்று புக்கிட் மேரா வியூ புளோக் 118ல் அமைந்துள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தொல்லை விளைவிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை கூறியது.
அந்த வீட்டின் வாயிற்கதவிலும் கம்பிச் சட்டங்களிலும் மஞ்சள் சாயம் தெளிக்கப்பட்டிருந்தது.
காவல்துறையின் கிளமெண்டி பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, காவல்துறைக் கண்காணிப்பு கேமராப் பதிவுகளின் உதவியுடன் சந்தேகத்துக்குரியவரை அடையாளம் கண்டனர். அதே நாளில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 16ஆம் தேதி அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
கார்த்திக் ராவ் கங்கையா சம்பவம் நடந்த இடத்திற்குச் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடன்முதலைத் தொல்லை தொடர்பான வேறு சம்பவங்களிலும் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. நீதிமன்றத்தில் ஜனவரி 23ஆம் தேதியன்று அவர் மீண்டும் விசாரிக்கப்படுவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் $5,000லிருந்து $50,000வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அதிகபட்சம் ஆறு பிரம்படிகளும் அவருக்கு விதிக்கப்படலாம்.

