தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடன் முதலைத் துன்புறுத்தல்: சந்தேகத்துக்குரியவர் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்

2 mins read
cd8be177-c357-4e04-9134-1a239fda854e
பாதிக்கப்பட்ட வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆடவர். - படம்: எஸ்பிஎச் மீடியா

கடன் முதலைத் துன்புறுத்தல் தொடர்பில் மார்ச் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட 45 வயது ஆடவரைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய ஆடவரைக் காவல்துறையினர் பிடோக் அவென்யூ 4இல் உள்ள பாதிக்கப்பட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆடவர் பயன்படுத்திய பூட்டு, எழுதி ஒட்டிய துண்டுச் சீட்டுகள் உள்ளிட்டவற்றுடன் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக, தெம்பனிஸ் வட்டாரக் குடியிருப்புப் பகுதியில் நடந்த கடன் முதலைத் துன்புறுத்தல் சம்பவம் குறித்து மார்ச் 4ஆம் தேதி இரவு 8.55 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வீட்டின் வாயிலைப் பூட்டியதுடன் கடன் குறித்த துண்டுக் குறிப்பு ஒன்றும் வீட்டுக்கு வெளியே ஒட்டப்படிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் மூலமாகவும் கண்காணிப்பு கேமராப் பதிவுகளின் உதவியுடனும் பிடோக் காவல்துறைப் பிரிவு (Bedok Police Division) அதிகாரிகள் ஆடவரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர். மறுநாள் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த ஆடவர் சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு இடங்களில் கடன் முதலைத் துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. திறன்பேசி, மஞ்சள் நிற மிதிவண்டியைப் பூட்டும் பூட்டு, சிவப்பு மை மார்க்கர் உள்ளிட்டவை அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மார்ச் 6 ஆம் தேதி, கடன் கொடுப்போர் சட்டம் 2008ன்கீழ் அந்த ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு $5,000 முதல் $ 50,000 வரையிலான அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

கடன் முதலைத் தொல்லை நடவடிக்கைகளை அறவே சகித்துக்கொள்ள முடியாது என்று காவல்துறை குறிப்பிட்டது.

வேண்டுமென்றே சொத்துகளை நாசம் செய்வது அல்லது பொதுப் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

கடன் முதலைகளிடமிருந்து விலகி இருக்கும்படியும், அவர்களுடன் எந்த வகையிலும் பணியாற்றவோ அவர்களுக்கு உதவவோகூடாது என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

கடன்முதலைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சந்தேகித்தாலோ அறிந்தாலோ ‘999’ என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கவும்.

குறிப்புச் சொற்கள்