சிங்கப்பூர் மீன் பண்ணைகள் அண்மைய எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் உள்ளூர் மீன்கள் உண்பதற்குப் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 16ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அது அவ்வாறு கூறியுள்ளது.
சிங்கப்பூர் மீன் பண்ணைகள் ஜோகூர் நீரிணையில் அமைந்துள்ளதைச் சுட்டிய அமைப்பு, எண்ணெய்க் கசிவு அதுவரை பரவியிருக்கக்கூடிய அபாயம் குறைவு என்று கூறியது.
மீன் பண்ணையாளர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருப்பதாகவும் நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கவிருப்பதாகவும் அது தெரிவித்தது.
ஜூன் 14ஆம் தேதி, நெதர்லாந்துக் கொடியை ஏந்திய ‘வோக்ஸ் மேக்சிமா’ எனும் படகு, பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர்க் கொடியை ஏந்திய ‘மரின் ஹானர்’ எனும் எண்ணெய் நிரப்பும் கப்பலை மோதியது. அதில் ‘மரின் ஹானர்’ கப்பலின் எண்ணெய்த் தொட்டி சேதமடைந்ததால் எண்ணெய் கசிந்து கடலில் பரவியது.
எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தை அடுத்து துப்புரவுப் பணியை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அமைப்புகள், நெதர்லாந்துக் கப்பலின் இயந்திரம் திடீரென்று செயலிழந்ததால் அது கட்டுப்பாட்டை இழந்ததாக ஜூன் 16ஆம் தேதி தெரிவித்தன.
செயிண்ட் ஜான்’ஸ், லாசரஸ் தீவுகளில் குறிப்பிடத்தக்க வகையில் வனவிலங்குகளுக்கு உயிர்ச்சேதம் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இதனால் இயற்கைக்கு ஏற்படக்கூடிய நீண்டகாலப் பின்விளைவுகள் குறித்து விழிப்புடன் இருப்பதாக இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, எண்ணெய்க் கசிவைத் தொடர்ந்து சுத்திகரிப்பு முயற்சிகளை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்த இதுவரை கிட்டத்தட்ட 1,500 மீட்டர் மிதக்கும் தடுப்பு அரண் போடப்பட்டுள்ளது. ஜூன் 18ஆம் தேதிக்குள் செந்தோசா தீவு, லாப்ரடோர் இயற்கைப் பாதுகாப்புப் பகுதி ஆகியவற்றில் உள்ள பல கடற்கரைகளில் கூடுதலாக 1,600 மீட்டர் தடுப்பு அரண் போடப்படும் என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசியச் சுற்றுப்புற அமைப்பு, தேசிய பூங்காக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி), செந்தோசாத் தீவு மேம்பாட்டுக் கூட்டு நிறுவனம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை திங்கட்கிழமை (ஜூன் 17) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
தற்காப்பு நடவடிக்கையாக சாங்கி ஈஸ்ட்டில் உள்ள தடுப்பு அரண் மாற்றப்படும் என்று அறிக்கை தெரிவித்தது.
முன்னதாக, கடற்கரைகளில் துப்புரவுப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் நீரின் தரத்தை மீட்டெடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துவதாக சிஎன்ஏவின் கேள்விகளுக்கு ஜூன் 17ஆம் தேதி அளித்த பதிலில் அது குறிப்பிட்டது.
ஜூன் 16ஆம் தேதி பிற்பகலில் ஏறக்குறைய பயிற்சிபெற்ற ஊழியர்கள் 100 பேர், உரிய கருவிகளுடன் செந்தோசா கடற்கரைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 14ஆம் தேதி நடந்த எண்ணெய்க் கசிவு குறித்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தகவல் அளித்த உடனேயே கண்காணிக்கத் தொடங்கியதாகவும் அன்று இரவு 9.20 மணியளவில் பலாவான் கடற்கரையின் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பொதுமக்களுக்கு மூடியதாகவும் செந்தோசா மேம்பாட்டுக் கழகம் கூறியது.