சிங்கப்பூர் முழுவதும் உள்ள 159 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் இனி, அன்றாடம் உள்நாட்டுப் படைப்பாளிகளின் இசை ஒலிபரப்பப்படும்.
இந்த முயற்சி, மக்கள் அதிகம் செல்லும் பொது இடங்களுக்குச் சிங்கப்பூரில் உருவான இசையைக் கொண்டுவரும் நோக்கத்தின் ஒரு பகுதியாகும்.
ஃபேர்பிரைஸ் குழுமத்துடன் இணைந்து, தேசியக் கலை மன்றம் இந்த முன்முயற்சியை வெள்ளிக்கிழமை (ஜூலை 17) கிளார்க் கீ ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் அறிமுகப்படுத்தியது.
இந்தக் கூட்டாண்மையைக் கௌரவிக்க இரு அமைப்புகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
கலாசார, சமூக, இளையர்துறை, போக்குவரத்துத் துணையமைச்சர் பே யாம் கெங் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கையொப்ப நிகழ்வைப் பார்வையிட்டார்.
வாடிக்கையாளர்கள் இனி ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் வரை, உள்ளூர்க் கலைஞர்களின் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.
இதன் வழி பொதுமக்களில் மேலும் பலர் உள்ளூர் இசையைத் தெரிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்து வரும், புகழ்பெற்ற உள்ளூர் இசைக்கலைஞர்கள், ‘பாப்’, ‘ஆர்என்பி’, மெல்லிசைப் பாடல்கள் போன்ற இசை வகைகளில் பாடிய அனுபவம் கொண்டவர்கள்.
சொல்லிசைக் கலைஞர் ‘அபாங்சபாவு’, முன்னாள் ‘சிங்கப்பூர் ஐடல்’ போட்டியாளர் தபிதா நௌசர், பாடகர்-பாடலாசிரியர்களான இமான் ஃபாண்டி, ‘லல்லபாய்’ போன்ற கலைஞர்களின் ஆங்கிலம், மலாய், சீன, தமிழ் மொழிப் பாடல்கள் ஒலிபரப்பப்படும்.
குழுமத்தின் சமூக வலையமைப்பான ‘FPG ADvantage’ வழி, நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட பேரங்காடிகளில் இருக்கும் மின்னிலக்கத் திரைகளிலும் கலைஞர்களின் படங்கள் ஒளிபரப்பப்படும்.
முழுமையான பாடல் பட்டியலை https://go.gov.sg/ipsgm-nacfp என்ற இணையமுகவரியில் காணலாம்.
கலைஞர்கள் மேலும் பலர் இடம்பெறும் வகையில் பாடல் பட்டியல் காலப்போக்கில் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் உள்ளூர்க் கலைஞர்களைச் சாங்கி விமான நிலையத்திற்குள் அறிமுகப்படுத்தவும், எம்ஆர்டி நிலையங்களில் கலைப்படைப்புகளை நிறுவவும் மன்றம் முயற்சிகளை எடுத்துள்ளது.

