2025ல் உள்ளூர் காய்கறி, கடல் உணவு உற்பத்தி அதிகரிப்பு

முட்டை உற்பத்தி சரிவு

2025ல் உள்ளூர் காய்கறி, கடல் உணவு உற்பத்தி அதிகரிப்பு

2 mins read
b57eb246-4b67-4de3-a625-8cbae0cc41ec
சிங்கப்பூரின் காய்கறி, கடல் உணவு உற்பத்தி தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதாக சிங்கப்பூர் உணவு முகமையின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது. படத்தில் ஜூரோங் தொழிற்சாலைக் கட்டடத்துக்குள் அமைந்துள்ள குரோகிரேஸ் செங்குத்துக் காய்கறிப் பண்ணை. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் விவசாயப் பண்ணைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும், 2025ஆம் ஆண்டில் காய்கறிகள், கடல் உணவுகளின் உள்நாட்டு உற்பத்தி சற்று அதிகரித்துள்ளதாகச் சிங்கப்பூர் உணவு முகமை (SFA) தெரிவித்துள்ளது.

கடந்த 2024இல் 16,400 டன்னாக இருந்த காய்கறி உற்பத்தி, 2025ல் 16,600 டன்னாக உயர்ந்ததாக வெள்ளிக்கிழமை (மே 8) வெளியிடப்பட்ட உணவு புள்ளிவிவர ஆண்டு அறிக்கை தெரிவித்தது.

அதேபோல், கடல் உணவு உற்பத்தி 3,500 டன்னிலிருந்து 3,800 டன்னாக அதிகரித்துள்ளது.

முட்டை உற்பத்தி கடந்த ஆண்டைவிட 5 விழுக்காடு சரிவடைந்துள்ளது. 2024ல் 773.5 மில்லியனாக இருந்த முட்டை எண்ணிக்கை, 2025ல் 736.7 மில்லியனாகக் குறைந்தது.

சில பண்ணைகளில் ஏற்பட்ட தற்காலிகச் செயல்பாட்டுச் சிக்கல்களே அதற்குக் காரணம் என்றும், இது ஒட்டுமொத்தத் துறையையும் பாதிக்காது என்றும் முகமை விளக்கம் அளித்துள்ளது.

சிங்கப்பூரின் ‘30-க்குள் 30’ என்ற இலக்கு மாற்றியமைக்கப்பட்டு, தற்போது 2035ஆம் ஆண்டிற்குள் நாட்டின் நார்ச்சத்து தேவையில் 20 விழுக்காட்டையும், புரதச் சத்து தேவையில் 30 விழுக்காட்டையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் நார்ச்சத்து தேவையில் 8 விழுக்காடும், புரதத் தேவையில் 25 விழுக்காடும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன.

ஜோகூர் நீரிணையில் உள்ள மிதக்கும் மீன் பண்ணைகள். செலவு அதிகரிப்பால் 2024ல், 26 அதாவது கால்வாசி மீன் பண்ணைகள் மூடப்பட்டன. புதிய திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்படும் கடல்பகுதி கட்டணம் செலுத்த வேண்டும்.
ஜோகூர் நீரிணையில் உள்ள மிதக்கும் மீன் பண்ணைகள். செலவு அதிகரிப்பால் 2024ல், 26 அதாவது கால்வாசி மீன் பண்ணைகள் மூடப்பட்டன. புதிய திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்படும் கடல்பகுதி கட்டணம் செலுத்த வேண்டும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைந்து வரும் பண்ணைகள்

2024ல் 225ஆக இருந்த நில, கடல் பண்ணைகளின் எண்ணிக்கை 2025ல் 206 ஆகக் குறைந்துள்ளன. இதில் 139 காய்கறிப் பண்ணைகள்.

அண்மையக் காலத்தில் கொவிட்-10 தொற்றுநோய்ப் பரவல், மின்சாரக் கட்டண உயர்வு, விநியோகச் சங்கிலி பாதிப்புகள் போன்றவை முதலீட்டாளர்களின் நம்பிக்கைக் குறைந்தது உள்ளூர் பண்ணைகளைப் பெரிதும் பாதித்துள்ளன.

இதனால். புதிய பண்ணைகள் தொடங்கப்பட்டபோதும், சில பண்ணைகள் மூடப்பட்டன, சில தயாராவதில் தாமதமாகின என்று அறிக்கை சுட்டியது.

தற்போது நிகழும் ஈரான் போர், மின்சாரக் கட்டணம், உரம், மீன் உணவுகளின் விலைகளை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தொழில்நுட்பப் பயன்பாட்டால் பண்ணைகளின் உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டருக்கு 10 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

உணவுநச்சுச் சம்பவங்கள் குறைந்தன

இதற்கிடையில், உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் உணவு நச்சுப் பாதிப்புகள் 2024ஆம் ஆண்டை விடக் கடந்த ஆண்டில் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

100,000 பேரில் 16.8 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர், இது முந்தைய ஆண்டின் 23 என்ற எண்ணிக்கையை விடக் குறைவாகும்.

குறிப்புச் சொற்கள்