தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பொய்யுரைத்தேன்’: தற்காப்பு வழக்கறிஞரிடம் ஒப்புக்கொண்டார் லோ பெய் யிங்

3 mins read
cb01a7c9-baa4-40df-9599-4c9c9248dffd
வியாழக்கிழமை (அக்டோபர் 17) நீதிமன்ற வளாகத்தில் லோ பெய் யிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் நீதிமன்ற விசாரணையில் திடீர் திருப்பமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானின் உதவியாளரும் முன்னாள் உள்வட்ட உறுப்பினருமான (cadre member) திருவாட்டி லோ பெய் யிங் பொய்யுரைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.

நான்காவது நாளாக வியாழக்கிழமை (அக்டோபர் 17) நடந்த விசாரணையின் தொடக்கத்தில் நிதானத்துடனும் தெளிவுடனும் பேசினார் திருவாட்டி லோ.

ஆயினும், விசாரணை முடிவுறும் தருவாயில் தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமாபோய்யின் கேள்வி வீச்சுகளால் அவர் நிலைகுலைந்துப் போனார்.

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் தாம் சமர்ப்பித்த பத்திரங்களில், திரு யுதிஷ்த்ரா நாதன் அனுப்பிய குறுந்தகவல் நீக்கப்பட்ட காரணம் குறித்து பொய்யுரைத்ததை நீதிமன்றத்தில் திருவாட்டி லோ ஒப்புக்கொண்டார்.

“நாம் இதுபற்றி மீண்டும் பொய்களைச் சொல்லவேண்டும்,” என்று தம் நண்பர் திரு நாதன் எழுதியதைத் திருவாட்டி லோ நீக்கியதாகத் தெரியவந்தது. அதை அவர் முன்னதாக ஒப்புக்கொள்ளாமல் உண்மை அல்லாத மற்றொரு காரணத்தைச் சொல்லியிருந்தார்.

திருவாட்டி லோ சொன்ன பொய்

வியாழக்கிழமை நீதிமன்ற விசாரணை முடியும் முன்னர், நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவுக்குத் திருவாட்டி லோ அனுப்பிய பத்திரங்களைப் பற்றி தற்காப்பு வழக்கறிஞர் ஜுமாபோய் கேள்வி கேட்கத் தொடங்கினார்.

திருவாட்டி லோ, திருவாட்டி ரயீசா, திரு நாதன் ஆகியோர் இணைந்திருந்த வாட்ஸ்அப் குழுவிலுள்ள குறுஞ்செய்திகளை அந்தப் பத்திரங்கள் கொண்டிருந்தன.

கட்சித் தலைவர்களைத் தவிர, திருவாட்டி ரயீசா பொய்யுரைத்தது அப்போது திருவாட்டி லோவுக்கும் திரு நாதனுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.

நீக்கப்பட்ட குறுஞ்செய்தி, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பற்றியது என்பதால் அதனை நீக்கியதாக திருவாட்டி லோ கூறினார்.

இது அப்பட்டமான பொய் இல்லையா எனக் கேட்டார் திரு ஜுமாபோய்.

சற்று அமைதி காத்து, தலை குனிந்தவாறு காணப்பட்ட திருவாட்டி லோ, ‘கண்டிப்பாக,’ எனப் பதிலளித்தார்.

திரு நாதன், தாம் அனுப்பிய குறுஞ்செய்திக்காக வருத்தப்படுகிறார் என்பதைப் புரிந்துகொண்டு அதனை மறைக்க முற்பட்டதாக திருவாட்டி லோ கூறினார்.

வாட்ஸ்அப் குழுவில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் வெளிப்படுத்தப்படலாம் என்ற கவலையாலும் அதற்காக திரு நாதன் தாக்கப்படக்கூடாது எனத் தாம் விரும்பியதாலும் அவ்வாறு செய்ததாக திருவாட்டி லோ தெரிவித்தார்.

இருந்தபோதும் இந்த உரையாடல் முழுவதையும் மூத்த நாடாளுமன்றப் பணியாளர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஹாயு மஹ்ஸாமும் பார்த்ததாக அவர் சொன்னார்.

“திருவாட்டி ரஹாயு என் பக்கத்தில் அமர்ந்து எல்லாக் குறுந்தகவல்களையும் உறுதிசெய்த பிறகுதான் குறுந்தகவல் நீக்கப்பட்டது,” என்று திருவாட்டி லோ கூறினார்.

நீக்கப்பட்ட குறுஞ்செய்தி என்ன என்று திருவாட்டி ரஹாயுவுக்குத் தெரியுமா என திரு ஜுமாபோய் கேட்ட கேள்விக்கு, “இல்லை, நீக்கம் என்னுடையது. ஆனால் அந்தக் குறுஞ்செய்தியை அவர் பார்த்திருப்பார் என்பது என் நிலைப்பாடு,” என்று அவர் பதிலளித்தார்.

பாட்டாளிக் கட்சிக்காக 10 ஆண்டுகாலம் சேவையாற்றிய திருவாட்டி லோ, 2022ல் பதவி விலகினார்.

‘காண்டினெண்டலிஸ்ட்’ (Kontinentalist) தரவு ஆய்வு நிறுவனத்தின் இணை நிறுவனரும் அதன் தலைவருமாக திருவாட்டி லோ உள்ளார்.

முன்னதாக திருவாட்டி லோ, பொய்யுரைத்ததற்கான விளைவின் கடுமையை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் எதிர்பார்க்கவில்லை என விசாரணையின் தொடக்கத்தில் கூறியிருந்தார்.

அத்துடன், திருவாட்டி கான் கூறியது பொய் என்று 2021 அக்டோபரில் தெரிந்துகொண்ட திரு பிரித்தம் சிங், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் தாமாகவே அப்பொய்யைத் தெளிவுபடுத்த முன்வந்திருக்கவேண்டும் என்றும் திருவாட்டி லோ தெரிவித்தார்.

சிங் பொய்யுரைத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்காக வியாழக்கிழமை (அக்டோபர் 17) நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது திருவாட்டி கான், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரிக்கப்பட்ட பின்னர் திருவாட்டி லோ சாட்சிக்கூண்டில் ஏறினார்.

திருவாட்டி லோவைத் தற்காப்புத் தரப்பு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தொடர்ந்து விசாரிக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்