சுவா சூ காங் நாடாளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் நீடித்த டாங் சீ சிம் காலமானார்

சுவா சூ காங் நாடாளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் நீடித்த டாங் சீ சிம் காலமானார்

2 mins read
ef57c98d-8455-44d5-886a-20a9eb2de8a5
சிங்கப்பூரின் முன்னோடி அரசியல்வாதிகளில் ஒருவரான டாங் சீ சிம் 94 வயதில் காலமானார். - படம்: லாரன்ஸ் வோங்/ ஃபேஸ்புக்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தில் விவசாயிகளின் குடியேற்றத்திற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாங் சீ சிம் இம்மாதம் 15ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 94.

அவர், நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராக சுவா சூ காங் குழுத்தொகுதியில் சேவையாற்றியவர்.

சிங்கப்பூர் முன்னோடிகளில் ஒருவரை இழந்திருக்கிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். திரு டாங், அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் நாட்டுக்குச் சேவையாற்றியதாக அவர் புகழாரம் சூட்டினார்.

1966ஆம் ஆண்டிலிருந்து 1988ஆம் ஆண்டுவரை சுவா சூ காங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்புவகித்த திரு டாங், துரிதமாக வளர்ந்துவரும் காலகட்டத்தில் குடியிருப்பாளர்களுக்கு உறுதியான முறையில் ஆதரவளித்தார்.

அரசியலைத் தாண்டி ஊழியரணிக்கும் சட்டத் துறைக்கும் திரு டாங் முக்கியமான வகையில் பங்களித்ததாகப் பிரதமர் வோங் மேலும் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் கல்வி முடிந்து நாடு திரும்பிய திரு டாங்கை 1962ஆம் ஆண்டு அரசியலில் சேரும்படி மக்கள் செயல் கட்சி அழைத்தது. அப்போது டாங் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

தொடக்கத்தில் கிரேத்தா ஆயர் குழுத்தொகுதியில் நிதியமைச்சர் கோ கெங் சுவீக்கு டாங் உதவிசெய்தார். அதன் பிறகு 1966ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுவா சூ காங்கில் டாங் நிறுத்தப்பட்டார்.

22 ஆண்டுகள் அங்குச் சேவையாற்றிவிட்டு 1988ஆம் ஆண்டு அரசியலிலிருந்து டாங் ஓய்வுபெற்றார்.

அரசாங்கச் சேவையில் இருந்தபோது நிதியமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர், நிதியமைச்சின் துணையமைச்சர், நாடாளுமன்றத் துணை நாயகர் ஆகிய பல்வேறு பொறுப்புகளை டாங் வகித்தார்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் திரு டாங்கின் சேவையை மெச்சி சமூக ஊடகத்தில் தமது இரங்கலைப் பதிவிட்டார். அரசாங்கச் சேவைக்குப் பல ஆண்டுகளைத் திரு டாங் அர்ப்பணித்தவர் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்