புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு விளைவுகளுடன் நீண்டகாலப் பயிற்சித் திட்டங்கள்

புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு விளைவுகளுடன் நீண்டகாலப் பயிற்சித் திட்டங்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Nov 2026 - 2:03 pm

2 mins read

நிறுவனங்களில் நீண்டகாலத்திற்கு நடைபெறக்கூடிய, அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற முறையான பயிற்சித் திட்டங்கள் குறித்துத் திட்டமிடப்பட்டு வருவதாக மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பயிற்சித் திட்டங்கள், பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு, பணியின் தொடக்க நிலையில் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் துறைகளில் அவர்களின் வாழ்க்கைத் தொழிலின் அடுத்தடுத்த நிலைகளுக்கும் தேவையான திறன்களை வழங்க உதவும் என்று அவர் கூறினார்.

ஜூலை மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு மனிதவளத் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பேற்றபின், உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த தமது முதல் நேர்காணலில் பேசிய திருவாட்டி லாவ், இந்தத் திட்டம் இறுதியில் முழுநேர வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலகளாவிய பொருளியல் நிச்சயமற்ற தன்மை, கடுமையான பொருளியல் மந்தநிலை அல்லது சரிவு ஏற்படக்கூடிய சூழலைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பட்டதாரி தொழில்துறைப் பயிற்சித் (ஜிஆர்ஐடி) திட்டத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, புதிய திட்டம் வடிவமைக்கப்படும் என்று திருவாட்டி லாவ் தெரிவித்தார்.

2025 அக்டோபரில் தொடங்கப்பட்ட ஜிஆர்ஐடி திட்டம், உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு உற்பத்தி, நிதிச் சேவைகள், தகவல், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், தொழில்முறைச் சேவைகள் போன்ற துறைகளில் உள்ள 50 நிறுவனங்களில் மூன்று முதல் ஆறு மாத காலப் பயிற்சித் திட்டங்களை வழங்குகிறது. இது தவிர, பொதுத்துறையிலும் வாய்ப்புகளை வழங்கும் ஒரு திட்டமும் இதனுடன் தொடர்புடையதாகச் செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் நல்ல பலன்களைத் தந்துள்ளதாகவும், இதில் பயிற்சி பெற்றவர்களில் பத்து பேரில் ஆறு பேர் தற்போது பணியில் இருப்பதாகவும் தற்காலிக அமைச்சர் கூறினார்.

இருப்பினும், மூன்று மாத காலப் பயிற்சிக்கு ஒரு நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ, அதற்கு ஓர் எல்லை உண்டு என்று அவர் குறிப்பிட்டார். எனவே, பயிற்சியின் அடிப்படையில் இந்த புதிய திட்டம் ‘மேலும் அர்த்தமுள்ளதாக’ அமையும் வகையில் அதிகாரிகள் வடிவமைத்து வருகின்றனர்.

“நாம் நீண்டகாலத்திற்கு நீடிக்கக்கூடிய, வெறும் பொருளியல் மந்தநிலை, சரிவு அல்லது அதிர்ச்சிகளுக்காக மட்டும் வடிவமைக்கப்படாத ஒரு விஷயத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்துச் சிந்தித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்