பொத்தோங் பாசிர் அருகே தீவு விரைவுச்சாலையின் குறுக்கே 1.2 கிலோமீட்டருக்கு நடை, மிதிவண்டியோட்ட இணைப்புவழி அமையவிருக்கிறது.
அதற்கான கட்டுமானப் பணிகள் இவ்வாண்டு அக்டோபரில் தொடங்கி, 2027 இறுதிவாக்கில் நிறைவுபெறும்.
செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியையும் சிராங்கூன் சாலைக்கு அருகே ஜாலான் தாமனில் அமைந்துள்ள அக்கம்பக்கப் பூங்காவையும் இணைக்கும் அந்த இணைப்புவழி, சிங்கப்பூரின் ஆக நீளமான உயர்த்தப்பட்ட நடையர், மிதிவண்டிப் பாலம், புதிய பாதைகள், நிலத்தடிவழி ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்.
சிங்கப்பூரின் சேம்வோ கட்டுமான நிறுவனம், அதன் முதன்மை ஒப்பந்ததாரராகச் செயல்படும்.
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அப்பகுதிக்குள் வாகனப் போக்குவரத்தையும், நடைபாதைகளையும் மிதிவண்டிப் பாதைகளையும் மாற்றியமைக்க வேண்டியிருக்கும் என்று சேம்வோ நிறுவனம் குறிப்பிட்டது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, நடையர்களும் மிதிவண்டியோட்டிகளும் கட்டுமானத்தளத்தைச் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீவு விரைவுச்சாலையில் அந்த இணைப்புவழிக் கட்டுமானத்தின்போது, இரைச்சல், தற்காலிக மாற்றுவழிகள் எனச் சிறிது காலத்திற்குக் குடியிருப்பாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காலாங் பூங்கா இணைப்புப்பாதையைப் பத்து கிலோமீட்டர் நீள தடையற்ற பயண வழியாக மாற்றும் நகர மறுசீரமைப்பு ஆணையத்தினுடைய பெருந்திட்டத்தின் இறுதிக் கட்டமே தீவு விரைவுச்சாலையில் அமைக்கப்படும் இந்தப் புதிய இணைப்புவழி.
தொடர்புடைய செய்திகள்
அதற்கான பணிகள் நிறைவுற்றதும், 30 முதல் 45 நிமிடங்களுக்குள் பீஷானிலிருந்து மிதிவண்டி மூலம் மத்திய வர்த்தக வட்டாரத்திற்குச் சென்றுவிடலாம். இப்போது, அதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆவதாக ஆணையம் தெரிவித்தது.
பீஷானிலிருந்து நகரத்திற்குச் செல்லும் மிதிவண்டித் தடத்தின் மற்ற ஐந்து இணைப்புப்பாதைகள், ஈராண்டுகளுக்குமேல் நீடித்த கட்டுமானப் பணிகளுக்குப்பின் கடந்த 2023 அக்டோபரில் திறக்கப்பட்டன.
அப்பர் பூன் கெங்கிலும் காலாங்கிலும் புதிய நிலத்தடி வழிகள், சிராங்கூன் சாலையிலும் பெண்டிமியர் சாலையிலும் புதிய சாலைக் கடப்புகள் ஆகியவற்றை அவை உள்ளடக்கும்.
தீவு விரைவுச்சாலையில் புதிய மிதிவண்டி இணைப்புவழியை ஏற்படுத்த 2023 அக்டோபரில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்நிலையில், அதனை அமைக்க சேம்வோ நிறுவனத்திற்கு இவ்வாண்டு ஜூன் மாதம் $57.6 மில்லியன் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அரசாங்கத்தின் ‘ஜிபிஸ்’ (GeBiz) இணையத்தளம் தெரிவித்தது.