சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் வசிப்போரில், செம்பவாங் பகுதி மக்கள் தங்களின் வேலை இடங்களுக்குச் செல்ல மிக நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர் என்று அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
இப்பகுதி மக்களின் சராசரி பயண நேரம் 50 நிமிடங்களாகப் பதிவாகியுள்ளது. புள்ளிவிவரத் துறை ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று வெளியிட்ட குடும்ப ஆய்வு 2025 அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
செம்பவாங்கிற்கு அடுத்தபடியாக புக்கிட் பாஞ்சாங், சுவா சூ காங், ஜூரோங் வெஸ்ட், பொங்கோல், செங்காங், உட்லண்ட்ஸ்,ஈசூன் உள்ளிட்ட ஒன்பது வட்டாரங்களில் வசிப்பவர்களின் சராசரி பயண நேரம் 45 நிமிடங்களாக உள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் மக்களில் பாதியளவினர் மத்திய வர்த்தக வட்டாரப் பகுதியிலேயே பணிபுரிவதால், அங்கிருந்து தொலைவில் உள்ள வடக்குப் பகுதி மற்றும் வடகிழக்குப் பகுதி மக்களுக்குப் பயண நேரம் அதிகமாக இருப்பதாக போக்குவரத்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, டங்ளின் வட்டாரத்தில் வசிப்போர் மிகக் குறைந்த பயண நேரத்தைக் கொண்டுள்ளனர். இவர்களின் சராசரி பயண நேரம் வெறும் 25 நிமிடங்களாக மட்டுமே உள்ளது. புக்கிட் மேரா, புக்கிட் தீமா, கிளிமெண்டி, கேலாங், மரீன் பரேட் மற்றும் தோ பாயோ போன்ற பகுதிகளில் வசிப்பவர்களின் சராசரி பயண நேரம் 30 நிமிடங்களாகும்.
சிங்கப்பூரில் ஒட்டுமொத்தமாக வேலைக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் 57.7 விழுக்காடாக இருந்த பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு, 2025ஆம் ஆண்டில் 60.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, ரயில், பேருந்து ஆகிய இரண்டையும் இணைத்து தங்களின் பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை 26.4 விழுக்காட்டிலிருந்து 30.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

