துவாஸ் சோதனைச்சாவடியில் 10,000 மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்ட லாரி ஓட்டுநர்

துவாஸ் சோதனைச்சாவடியில் 10,000 மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்ட லாரி ஓட்டுநர்

1 mins read
கடத்தல் முயற்சியை முறியடித்த ‘ஐசிஏ’ அதிகாரிகள்
7f0d43b2-fcbd-4842-82f1-3eead3c11f61
மலேசியரான அந்த 46 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். - படங்கள்: குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

துவாஸ் சோதனைச்சாவடி வழியாகச் சிங்கப்பூருக்குள் 900க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளையும் 9,000க்கும் அதிகமான மின்சிகரெட் திரவக் குப்பிகளையும் கடத்த முயன்ற சம்பவம் ஆகஸ்ட் 8ஆம் தேதி முறியடிக்கப்பட்டது.

குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) ஃபேஸ்புக்கில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சம்பவ நாளன்று, மலேசியப் பதிவெண் கொண்ட லாரியைச் சோதனைச்சாவடி அதிகாரிகள் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னாலிருக்கும், ஓய்வெடுப்பதற்கான பகுதியில் போர்வை, மெத்தை, தலையணை ஆகியவற்றுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

அதையடுத்து, 46 வயது மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேல் விசாரணைக்காக இந்த வழக்கு சுகாதார அறிவியல் ஆணையத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2026 மே 1ஆம் தேதி நடப்புக்கு வந்த புகையிலை, மின்சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ், மின்சிகரெட் பயன்படுத்துவோருக்கு $10,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம். எட்டோமிடேட் ரக மின்சிகரெட் பயன்படுத்துவோருக்கு $20,000 வரையிலான அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், மின்சிகரெட்டுகளை விநியோகிப்போருக்கு இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் இரண்டு முதல் ஐந்து பிரம்படிகளும், இறக்குமதி செய்வோருக்கு மூன்று முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் ஐந்து முதல் 15 பிரம்படிகளும் விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
குடிநுழைவுசோதனைச்சாவடிஅதிகாரிமின்சிகரெட்பறிமுதல்