நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி ஒன்று முதல் தளத்திலிருந்து நிலத்தடித் தளத்துக்குக் கவிழ்ந்து விழுந்தது.
ஏஸ்ட்ரிட் ஹில் பகுதியில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது. நிலத்தைத் தோண்டுவதற்கான ‘எக்ஸ்கவேட்டர்’ வாகனத்தை இயக்கும் ஊழியர் ஒருவருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. அவர், சம்பவத்தின்போது கவிழ்ந்த லாரிக்கு அருகே இருந்தார்.
காயமடைந்த அந்த ஊழியரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) பிற்பகல் இரண்டு மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
அதேநேரத்தில் சம்பவம் குறித்து மனிதவள அமைச்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட கட்டுமானத் தளத்தில் பணிகளைக் கவனிக்கும் நிறுவனம் எச்எல்பிசி (HLBC) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த ஊழியரை வேலைக்கு வைத்துள்ள நிறுவனம் ‘டி.ஏ.ஜி கன்ஸ்டிரக்ஷன்’ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
லாரி, ‘எக்ஸ்கவேட்டர்’ வாகனத்தின் மீது விழுவதற்கு முன்பு காயமடைந்த ஊழியர் அதிலிருந்து தப்பித்துவிட்டார் என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். தப்பிக்கும்போது ஊழியரின் கால்களில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் பேச்சாளர் சொன்னார்.
இந்த விபத்து தொடர்பாக பதிவான படங்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

