துவாசில் லாரி கவிழ்ந்து விபத்து; அறுவர் மருத்துவமனையில் சேர்ப்பு

1 mins read
c3645ff3-776c-4368-bc08-a4dad2f36089
விபத்து குறித்து காலை 7.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன. - படங்கள்: எஸ்ஜிஆர்வி / ஃபேஸ்புக்

துவாசில் திங்கட்கிழமை (ஜூன் 16) லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, ஆடவர் அறுவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவ்விபத்து குறித்து காலை 7.20 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.

துவாஸ் சௌத் அவென்யூ 5 - துவாஸ் சௌத் அவென்யூ 10 சந்திப்பிற்கு அருகே, துவாஸ் கிரசென்ட் எம்ஆர்டியை நோக்கிச் செல்லும் வழியில், அந்த லாரி சறுக்கிச் சென்று கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து விளக்கிற்கு முன்பாக, சாலையின் வலது ஓரத் தடத்தில் சாம்பல் நிறத்திலான அந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்து கிடந்ததை எஸ்ஜிஆர்வி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி காட்டியது.

36 முதல் 50 வயதிற்குட்பட்ட அறுவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இருவர்க்கு இலேசான காயமேற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

விபத்து தொடர்பில் 33 வயது லாரி ஓட்டுநர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்