ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்தில் உள்ள நட்மெக் ரோட்டில் லாரி ஒன்று சறுக்கிய சம்பவத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விபத்துக் குறித்துத் திங்கட்கிழமை (நவம்பர் 17) மாலை மணி 4.35க்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. ஜாலான் ஜிந்த்தான், நட்மெக் ரோடு சந்திப்புக்கு அருகே சரிவான சாலையின் கீழ்ப் பகுதியில் லாரி இருந்ததாகத் தெரியவந்தது. ஸ்காட்ஸ் ஸ்குவேர் கடைத்தொகுதியின் பின்பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் சாலைச் சந்திப்பு உள்ளது.
44 வயது லாரி ஓட்டுநருக்குச் சிறிது காயம் ஏற்பட்டது. ஆயினும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் காவல்துறை கூறியது.
சாலையில் சறுக்கிய லாரியை இழுவை வாகனமொன்று சரிவின் மேற்பகுதிக்குக் கொண்டுசெல்ல முற்படும் காணொளி டிக்டாக்கில் பரவி வருகிறது. அருகில் உள்ள கட்டடத்திலிருந்து சிலர் அதனைப் பார்ப்பதும் காணொளியில் தெரிகிறது.
லாரியின் பக்கவாட்டில், ‘எஸ்டி ஹெல்த்கேர்’ எனும் வார்த்தைகளைக் காணமுடிகிறது.
பொருள்களை விநியோகம் செய்யும் எஸ்டி லாஜிஸ்டிக்சின் கிளை நிறுவனம் எஸ்டி ஹெல்த்கேர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ஊடகம், அதனைத் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களைக் கேட்டுள்ளது.

