லாரி - இழுவை வண்டி மோதல்; மருத்துவமனையில் பத்துப் பேர்

லாரி - இழுவை வண்டி மோதல்; மருத்துவமனையில் பத்துப் பேர்

1 mins read
3b315b3d-c5e4-4264-9026-20d71109ad6c
முன்னால் சென்ற இழுவை வண்டிமீது லாரி மோதியது. - படம்: ஃபேஸ்புக் / எஸ்ஜி ரோடு விஜிலான்டே

கிராஞ்சி விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) மாலை உச்ச நேரத்தின்போது லாரியும் இழுவை வண்டியும் மோதிக்கொண்ட விபத்து நேர்ந்தது.

அதனைத் தொடர்ந்து பத்துப் பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். துவாசை நோக்கிச் செல்லும் கிராஞ்சி விரைவுச்சாலையில், சுவா சூ காங் டிரைவ் வெளிவழிக்குச் சற்று முன்பாக, மாலை 6 மணியளவில் அவ்விபத்து நேர்ந்தது என்று காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

ஏழு பேர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் மூவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் அப்போது அவர்கள் அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர் என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்தப் பத்துப் பேரில் ஒன்பது பேர் லாரி பயணிகள். அவர்கள் 30 முதல் 48 வயதிற்குட்பட்டவர்கள். மற்றொருவர் 39 வயது லாரி ஓட்டுநர். விபத்து குறித்த காணொளி எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஆள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று விரைவுச்சாலையின் ஓரத் தடத்தில் செல்வதைக் காண முடிகிறது. அந்த லாரிக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்த இழுவை வண்டி மெதுவாகச் சென்று நிற்பது தெரிகிறது. சில நொடிகளில், அந்த லாரி, இழுவை வண்டியின் பின்புறத்தில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில், லாரியின் பின்புறம் மேல்நோக்கித் தூக்கப்படுவதையும் அதன் பின்னால் அமர்ந்திருந்த பலரும் முன்னோக்கிச் சரிவதையும் காண முடிந்தது. விபத்து குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்