சிங்கப்பூரில் கடந்த ஏழு மாதங்களில் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் அல்லது சீன அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து $6.1 மில்லியன் வரையிலான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி, அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்யும் 72 மோசடிச் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகரித்துவரும் இதுபோன்ற மோசடிகளில் பொதுமக்கள் சிக்காமல் கவனமாக இருக்கும்படி காவல்துறை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டது.
இந்த மோசடிகளில் அரசாங்க அதிகாரிகள் எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்வோரிடம் இருந்து அறிவிப்பு இன்றி தொலைபேசி அழைப்புகள் வரும். பாதிக்கப்பட்டோரின் தகவல்கள் பலவகை மோசடிகள் சார்ந்த குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர்களுக்கு ஆள்மாறாட்டக்காரர்கள் தெரிவிப்பார்கள்.
அவற்றில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று பாதிக்கப்பட்டோர்கள் கூறியதும் வேறு ஒரு அதிகாரிக்கு அழைப்பு மாற்றிவிடப்படும். அந்த அதிகாரி சீனாவில் உள்ளவர் எனவும் தொடர் விசாரணைக்கும் பிணையில் விடுவிப்பதற்கும் உதவ குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பணம் மாற்றிவிட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் கேட்டுக்கொள்ளப்படுவார்.
சில சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர் நேரடியாகப் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து அடையாளம் தெரியாதோரிடம் கொடுக்கவும் மோசடிக்காரர்கள் தூண்டுவர்.
போலி அதிகாரிகளை அதற்குப் பிறகு பாதிக்கப்பட்டோர் தொடர்புகொள்ள முடியாமல் போகும்போதும் அரசாங்கத் துறைகளிடம் முறையிட்ட பிறகும் மோசடிக்கு ஆளானது வெளிச்சத்துக்கு வரும்.
அடையாளம் அறியோதோரிடம் விலைமதிப்புள்ள பொருள்களை அல்லது பணத்தை நேரில் கொடுப்பது, வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றுவது, ஒரு தனிப்பட்ட இடத்தில் அவற்றை யாரோ அல்லது மோசடிக்காரருடன் சம்பந்தப்பட்ட ஒருவர் எடுத்துச் செல்லும் வகையில் வைப்பது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டது.
அரசாங்க அதிகாரிகள் ஒருபோதும் பணப் பரிமாற்றம் செய்யும்படி யாரையும் கேட்டுக்கொள்ளமாட்டார்கள் எனவும் காவல்துறை உறுதிப்படுத்தியது. உரிமம் அற்றோரிடம் கடன் வாங்குவது, வங்கி விவரங்களை வெளியிடுவது, கைப்பேசியில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளையும் அரசாங்க அதிகாரிகள் செய்யும்படி தொலைபேசியில் கூறமாட்டார்கள்.
மேலும் தொலைபேசி அழைப்புகளை வேறு ஒரு அதிகாரிக்கு மாற்றிவிட மாட்டார்கள் என்பதையும் காவல்துறை அதன் அறிக்கையில் விளக்கியது.


