சிங்கப்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மின் பணப்பை மோசடிகளில் குறைந்தது $16,000 தொகை ஏமாற்றப்பட்டுள்ளது.
ஜூன் 14ஆம் தேதியிலிருந்து மோசடி குறித்து குறைந்தது 21 புகார்கள் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை சொன்னது. அந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டோரின் யூடிரிப் (YouTrip) அட்டைகள் ஊடுருவப்பட்டன.
அத்தகைய மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் உணவு தொடர்பான விளம்பரங்களையோ டுரியான் போன்ற உணவுகள் கழிவு விலைகளில் தருவதாக சமூகத் தளங்களில் வரும் விளம்பரங்களையோ நம்பி ஏமாந்தனர்.
அத்தகைய விளம்பரங்களால் கவரப்படுவோர் கொடுக்கப்பட்ட இணைப்பு மூலம் மோசடி தளங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தாங்கள் வாங்க விரும்பும் உணவுகளைப் பெற யூடிரிப் அட்டையின் விவரங்கள், விநியோக விவரங்கள், கைபேசி எண்கள் ஆகியவற்றைப் பதிவுசெய்யும்படி மோசடித் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதையடுத்து பாதிக்கப்பட்டோரின் கைபேசி எண்களைப் பயன்படுத்தி அவர்களின் யூடிரிப் கணக்குகளுக்குள் மோசடிக்காரர்கள் ஊடுருவியதாக அதிகாரிகள் கூறினர்.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய மறைச்சொல்லைப் பெற்ற பாதிக்கப்பட்டோர் தாங்கள் வாங்கும் உணவை உறுதிபடுத்த அதை இணையத் தளத்தில் பதிவுசெய்தனர்.
அதன்பின் யூடிரிப் கணக்கின் ஆறு இலக்க மறைச்சொல்லைப் பதிவுசெய்யும்படி கேட்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதன்பின் பாதிக்கப்போட்டோரின் ஒட்டுமொத்த யூடிரிப் கணக்கை மோசடிக்காரர்கள் அபகரித்துவிடுவர்.
யூடிரிப் கணக்கிலிருந்து செய்யாத பரிவர்த்தனைகளைக் கண்டபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பாதிக்கப்பட்டோர் அறிந்தனர்.
உணவு தொடர்பான மோசடி விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரவினாலும் மோசடிக்காரர்கள் வேறு உத்திகளையும் விளம்பரங்களையும் பயன்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
பொதுமக்கள் தங்கள் மின் பணப்பை மறைச்சொல்லை இணையத்தளத்திலோ வேறெந்த தளத்திலோ பதிவிடவேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.