சிங்கப்பூரில் நடந்துள்ள 660 மோசடிக் குற்றங்களில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின்பேரில் மொத்தம் 270 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த மோசடிகளில் ஏறத்தாழ $5.4 மில்லியன் தொகையை ஏமாற்றப்பட்டவர்கள் இழந்துள்ளனர். இதன் விவரங்களை காவல்துறை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அதன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
விசாரணையில் 185 ஆடவர்களும் 85 பெண்களும் காவல்துறைக்கு உதவி வருகின்றனர். அவர்கள் நேரடியாக மோசடி செய்தவர்கள் அல்லது மோசடியில் சம்பந்தப்பட்டத் தொகையை பரிவர்த்தனை செய்வதற்கு உதவியவர்கள் என்று அறியப்படுகிறது.
மின்வர்த்தகம், தூண்டிலிட்டு தரவுகளைக் களவாடுதல், பொய்யான வேலை வாய்ப்பு, அரசாங்க அதிகாரிபோல ஆள்மாறாட்டம், போலி முதலீடுகள், அதிர்ஷ்டக் குலுக்கல் போன்ற பலவித மோசடிகளில் சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விசாரிக்கப்படும் 270 நபர்களின் வயது 15 முதல் 80 வரை இருப்பதாகவும் ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை தீவு முழுவதும் நடந்த சோதனைகளில் அவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறையின் இணையத் தளபத்தியம் உட்பட அதன் ஏழு காவல்நிலையங்களின் அதிகாரிகள் அந்த சோதனைகளில் பணியாற்றினர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏமாற்றுதல், கள்ளப்பணப் பரிவர்த்தனை, உரிமம் இன்றி கட்டணச் சேவைகள் வழங்கியது போன்ற குற்றங்களுக்கு சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
கள்ளப் பணப் பரிவர்த்தனைக் குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் குற்றவாளிகளுக்கு , 10 ஆண்டுகள் சிறை, $500,000 அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
உரிமம் இன்றி கட்டணச் சேவை வழங்கிய குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறை, $125,000 அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படும்.
மோசடிக்காரர்களுக்கும் மோசடிக் கும்பல் உறுப்பினர்களுக்கும் மோசடிக்கு ஆள்சேர்ப்பவர்களுக்கும் கட்டாயமாக ஆறு முல் 24 பிரம்படிகள் வரை தண்டனையின் அங்கமாக வழங்கப்படும்.
மோசடிக்குத் தங்கள் வங்கிக் கணக்குகளை, சிங்பாஸ் மறைச்சொற்களை, கைப்பேசி சிம் அட்டைகளைப் பயன்படுத்தி கள்ளப் பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிப்போருக்கும் கட்டாயமாக 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படும்.
மோசடிகள் குறித்த மேல் விவரங்களுக்குப் பொதுமக்கள் www.scamshield.gov.sg என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கலாம், அல்லது 1799 என்ற ‘ஸ்கேம்ஷீல்ட்’ எண்ணில் உதவி நாடலாம்.
மோசடிகள் குறித்த தகவல்கள் வழங்கவிரும்புவோர் 1800-255-0000 என்ற காவல்துறை உதவி எண் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையப் பக்கத்தில் அவற்றை வழங்கலாம். அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்தது.


