அறுபதுகளில் இருக்கும் திரு கமால், மோசடிக்காரர்களிடம் தனது கடன் அட்டை விவரங்கள் இருப்பதை உணர கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆனது.
2024 அக்டோபர் இறுதியில் கழிவறைத் தாள்களுக்கான இணைய விளம்பரத்தால் அவர் ஈர்க்கப்பட்டார்.
தனியுரிமைக் காரணங்களைக் கூறி தனது முழுப் பெயரைக் குறிப்பிட மறுத்த திரு கமால், அந்த விளம்பரம் ஃபேஸ்புக்கில் வந்ததா அல்லது இன்ஸ்டகிராமில் வந்ததா என்பதை நினைவுகூர முடியவில்லை.
ஒவ்வொரு கழிவறைத் தாள் சுருளிலும் இருந்த கரடி உருவம் கொண்ட பேக்கேஜிங் தனது கவனத்தை ஈர்த்ததாக பொதுத்துறையில் பணிபுரியும் திரு கமால் கூறுகிறார். ஒரு பேக்கின் விலை $9. ஒரு பேக்கில் எத்தனை ரோல்கள் இருந்தன என்பது அவருக்கு நினைவில்லை.
தனது சுவா சூ காங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிற்கு வாரந்தோறும் வரும் ஐந்து வயதிற்குட்பட்ட தனது இரண்டு பேத்திகளை இந்த அழகான வடிவமைப்பு மகிழ்ச்சிப்படுத்தும் என்று அவர் நினைத்தார்.
திரு கமால் அந்த விளம்பரத்தைச் சொடுக்கினார். அது நம்பகமானதாகத் தோன்றியதாகவும், விலை நியாயமானதாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
“ஒரு பாப்-அப் தோன்றியது, எனது தனிப்பட்ட விவரங்களையும் (முகவரி உட்பட) கட்டண விவரங்களையும் தானாகப் பூர்த்தி செய்யுமாறு நான் கேட்கப்பட்டேன்,” என்று அவர் கூறுகிறார்.
திறன்பேசிகளில் உள்ள ‘ஆட்டோஃபில்’ (Autofill) அம்சங்கள், ஏற்கனவே சேமிக்கப்பட்ட தகவல்களை அந்தந்த இடங்களில் நிரப்பிவிடும். பரிவர்த்தனையை முடிப்பதற்கு முன், தனது கடன் அட்டையின் பின்னால் அச்சிடப்பட்ட பாதுகாப்பு குறியீட்டை மட்டும் உள்ளிட வேண்டியிருந்தது என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அவர் ஆர்டர் செய்த கழிவறைத் தாள்கள் ஒருபோதும் வரவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வங்கி அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவர், ஆஸ்திரேலியாவில் எதாவது வாங்கினீர்களா என்று கேட்க அழைத்தார். அவரது கடன் அட்டை விவரங்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று அந்த நபர் எச்சரித்தார், மேலும் அதை ரத்து செய்ய வேண்டுமா என்றும் கேட்டார்.
அந்த அழைப்பு ஒரு மோசடியாக இருக்குமோ என்று சந்தேகித்த திரு கமால், தான் வங்கியையே நேரடியாகத் தொடர்புகொள்வதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தார். அடுத்த நாள் வங்கியின் இணையத்தளத்தில் அதன் ஹாட்லைன் எண்ணைத் தேடி அழைத்துப்பேசினார்.
வங்கி முந்தைய நாள் அவரது கடன் அட்டையில் நான்கு கட்டணங்கள் செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியது, அதன் மொத்த மதிப்பு A$843 (S$723)க்கும் அதிகம். அந்தப் பொருள்கள் ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து வாங்கப்பட்ட மின்னணு பொருள்கள் ஆகும்.
தனது குறுஞ்செய்திகளைத் திரும்பச் சரிபார்த்தபோது, 2024 அக்டோபர் 27 அன்று - அதாவது அந்த விளம்பரத்தைச் சொடுக்கிய அதே நாளில் - தனது கடன் அட்டை விவரங்கள் அறியப்படாத கூகல் பே கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதை திரு கமால் உணர்ந்தார்.
திரு கமால் அதன் பிறகு பாதிக்கப்பட்ட கடன் அட்டை ரத்து செய்துவிட்டு காவல்துறையிடம் புகார் அளித்தார். விசாரணை நடைபெற்று வருகிறது.
திருடப்பட்ட நிதியைக் கண்டுபிடிப்பது அனைத்து வகையான மோசடிகளிலும் சவாலானது என்று மோசடி பொதுக் கல்வி அலுவலகத்தின் செயல்பாட்டுத் துறையின் உதவி இயக்குநர், காவல்துறை கண்காணிப்பாளர் ரோஸி ஆன் மெக்கின்டைர் விளக்குகிறார்.
மோசடிக்காரர்கள் பெரும்பாலும் பணத்தை வங்கி கணக்குகள் மூலம் விரைவாக மாற்றுகிறார்கள், வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள், ‘மணி மியூல்ஸ்’ எனப்படும் இடைத்தரகர்களைப் பயன்படுத்துகிறார்கள் அல்லது தடயத்தை மறைக்க கிரிப்டோகரன்சியாக மாற்றுகிறார்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஒரு சொடுக்கில் ஏமாற்றம்
2025ஆம் ஆண்டின் முற்பாதியில், வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து மோசடி வகைகளில் மின்-வணிக மோசடிகளும் ஒன்றாக இருந்தன. காவல்துறை புள்ளிவிவரங்களின்படி, இக்காலகட்டத்தில் 3,237 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மின்வணிக மோசடிகளில், இணையச் சந்தைகள் அல்லது சமூக ஊடகத் தளங்களில் உள்ள சலுகைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். பணம் செலுத்தியப் பிறகு, உறுதி அளிக்கப்பட்ட பொருள்களோ அல்லது சேவைகளோ வந்து சேருவதில்லை.
சில சந்தர்ப்பங்களில், வாங்குபவர்களைப் போல நடிக்கும் மோசடிக்காரர்களுக்குப் பொருள்களை வழங்கிய பிறகு, விற்பனையாளர்கள் பணம் பெறுவதில்லை. மோசடிக்காரர்கள் சில நேரங்களில் “பணம் செலுத்தியதற்கான ஆதாரம்” என போலியான ஸ்கிரீன்ஷாட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறார்கள்.
உடனடி நடவடிக்கை எடுக்கத் தூண்டும் வகையில் ஆர்வம் அல்லது எதையாவது இழந்துவிடுவோமோ என்ற அச்சம் போன்ற உணர்ச்சிகளைத் தூண்ட மோசடிக்காரர்கள் கவர்ச்சிகரமான சலுகைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று கண்காணிப்பாளர் மெக்கின்டைர் கூறுகிறார்.
நேரலை மூலம் பொருள் வாங்கும் மோசடி வழக்குகளும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார்.
2025 ஜனவரி முதல் அக்டோபர் வரை, 144 வழக்குகளில் $1.3 மில்லியன் மோசடி நடந்துள்ளது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 96 வழக்குகளில் இழந்த $840,000ஐ விட 50 சதவீதத்திற்கும் மேலதிகமாகும்.
ஷாப்பிங் மோசடிக் காலம்
சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் நெருங்கி வரும் வேளையில், மின்வணிக மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் குறித்து கண்காணிப்பாளர் மெக்கின்டைர் எச்சரிக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், பயனீட்டாளர்கள் குறைந்த காலத்தில் அதிகப் பொருள்களை வாங்கும் போக்கு உள்ளது என்று அவர் விளக்குகிறார்.
புத்தாடை வாங்குவது, கேட்டரிங் ஆர்டர்களை உறுதிப்படுத்துவது மற்றும் டெலிவரிகளை முன்பதிவு செய்வது போன்ற அதிகப்படியான வேலைகள் “முடிவெடுப்பதில் சோர்வை” ஏற்படுத்தக்கூடும்.
இது ஒவ்வொரு கட்டணம் அல்லது பரிவர்த்தனையையும் கவனமாகப் பரிசோதிக்கும் திறனைப் பாதிக்கிறது என்று கண்காணிப்பாளர் மெக்கின்டைர் விளக்குகிறார்.
மோசடிக்காரர்கள் இந்த அவசரத்தையும் கொண்டாட்டங்களைச் சுற்றியுள்ள கலாசார நடைமுறைகளையும் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.
பெரிய குடும்பக் கூடல்கள் மற்றும் கடைசி நேரத் தயாரிப்புகள் அதிக தேவையையும் நேர நெருக்கடியையும் உருவாக்குவதால், முக்கிய விடுமுறைக் காலங்களில் கேட்டரிங் மற்றும் உணவு தொடர்பான பொருள்கள் சம்பந்தப்பட்ட மோசடி வழக்குகள் அதிகரிக்கின்றன என்று கண்காணிப்பாளர் மெக்கின்டைர் கூறுகிறார்.
பண்டிகைக் காலத்தில் எதிர்பார்க்கப்படும் டெலிவரிகளைப் பயன்படுத்தி, தூண்டிலிடுதல் முயற்சிகள் மூலமாகவும் மோசடிக்காரர்கள் செயல்படலாம் என்று அவர் கூறுகிறார். தூண்டிலிடுதல் என்பது பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி தனிப்பட்ட அல்லது வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை விவரங்களை வெளிப்படுத்த வைப்பதாகும்.
கூடுதல் கட்டணம் தேவை என்றோ அல்லது டெலிவரி முயற்சி தோல்வியடைந்தது என்றோ கூறி மோசடிக்காரர்கள் குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல்களை அனுப்புவார்கள்.
தாங்கள் சிறிய தொகையை மட்டுமே செலுத்துவதாக நம்பி, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கட்டண விவரங்களை வழங்குவார்கள், பின்னர் தங்கள் கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதைக் கண்டறிவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
மோசடி நடந்து ஓராண்டிற்குப் பிறகும் திரு கமால் இணையத்தில் பொருள்கள் வாங்குகிறார் - ஆனால் இப்போது பாதுகாப்பான பழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்.
“இந்தப் பண்டிகைக் காலத்தில் நான் பாஜு கூருங் இணையத்தில் வாங்கக்கூடும்,” என்று அவர் கூறுகிறார். பாஜு கூருங் என்பது நோன்புப் பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் அணியப்படும் பாரம்பரிய மலாய் உடை ஆகும்.
அவர் இப்போது ‘கேஷ்-ஆன்-டெலிவரி’ (பொருள் வந்ததும் பணம் செலுத்துதல்) அல்லது ஷாப்பி போன்ற பாதுகாப்பான கட்டண விருப்பங்களை வழங்கும் தளங்களை மட்டுமே நம்புகிறார். மேலும் ‘பணம் செலுத்த’ (pay) என்பதைச் சொடுக்குவதற்குமுன் வாங்குபவர்களின் விமர்சனங்களைக் கவனமாகப் படிக்கிறார்.
‘இன்றைய சலுகை’ குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
சிந்தித்து வாங்குங்கள்
நம்பகமான இடங்களிலிருந்து வாங்குங்கள். உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள மின்-வணிகத் தளங்களின் பாதுகாப்பு மதிப்பீடுகளைச் சரிபார்க்கவும் (go.gov.sg/mhatsr).
சமூக ஊடக விளம்பரங்களில் உள்ள சலுகைகளை அந்தந்த நிறுவனத்திடம் நேரடியாகச் சரிபார்க்கவும்; விளம்பர இணைப்புகளைச் சொடுக்க வேண்டாம்.
எதார்த்தத்திற்கு மாறான மிகக் குறைந்த விலையில் வரும் நேரக்கட்டுப்பாட்டு சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
பாதுகாப்பாக பணம் செலுத்துங்கள்
மின்வணிகத் தளங்கள் வழங்கும் பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்தவும். விற்பனையாளருக்கு முன்பணம் செலுத்துவதையோ அல்லது நேரடியாக வங்கி பரிமாற்றம் செய்வதையோ தவிர்க்கவும்.
தனிப்பட்ட தகவல்கள், வங்கி மற்றும் சமூக ஊடகக் கணக்கு விவரங்கள் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் யாருடனும் பகிர வேண்டாம்.
பணம் செலுத்தவோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறவோ கோரி விற்பனையாளர்கள் அனுப்பும் இணைப்புகளைச் சொடுக்காதீர்கள் அல்லது மூன்றாம் தரப்புச் செயலிகளைப் பதிவிறக்காதீர்கள்.
விநியோகக் கட்டணங்கள் பொதுவாகப் பொருள்கள் வாங்கும்போதே முன்கூட்டியே செலுத்தப்படும். உங்கள் பார்சல் வரும் வரை காத்திருக்கும்போது, அதிகாரபூர்வ இணையத்தளம் அல்லது நம்பகமான ஆதாரங்களில் உங்கள் ஆர்டர் தகவலை எப்போதும் சரிபார்க்கவும்.

