உடற்பயிற்சியின் போது சத்தமான இசை; மூத்தோரை குறைகூறும் குடியிருப்பாளர்

உடற்பயிற்சியின் போது சத்தமான இசை; மூத்தோரை குறைகூறும் குடியிருப்பாளர்

2 mins read
50ec2c66-ebb0-4a6c-ab3f-dcbf8b8bb865
அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள புளோக் 230க்கும் 231க்கும் இடையில் உள்ள பொது இடத்தில் உடற்பயிற்சி நடவடிக்கைகள் நடக்கின்றன.  - படம்: ஃபேஸ்புக்/Complaint Singapore

அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் மூத்தோர் தங்களைத் துடிப்புடன் வைத்துக்கொள்ள வாரம் ஒருமுறை உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

உடற்பயிற்சி செய்யும் போது அவர்கள் இசையின் சத்தத்தை அதிகமாக வைப்பதால் குடியிருப்பாளர் ஒருவர் அவதிக்குள்ளாவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ‘கம்ப்ளைன்ட்’ சிங்கப்பூர் என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 15) பதிவிடப்பட்டுள்ளது.

பதிவில், “வாரந்தோறும் மூத்தோர் குழுவாகச் சேர்ந்து இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்கின்றனர். அப்போது அவர்கள் இசையின் சத்தத்தை அதிகமாக வைக்கிறார்கள். இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை இது தொடர்கிறது.

“இதனால் படிக்கவோ, வேலை செய்யவோ, தூங்கவோ முடியவில்லை. இது சுயநலமிக்கச் செயல்,” என்று அப்பதிவில் குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

‌ஷின்மின் டெய்லி நாளிதழின் தகவல்படி, அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள புளோக் 230க்கும் 231க்கும் இடையில் உள்ள பொது இடத்தில் உடற்பயிற்சி நடவடிக்கைகள் நடக்கின்றன.

“இந்த வட்டாரத்தில் வசிக்கும் மூத்தோர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக சிகாங் (qigong) உடற்பயிற்சியை வாரம் ஒருமுறை செய்கின்றனர்,” என்று உடற்பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்யும் திருவாட்டி யூ ஸியிங் ‌ஷின்மின் டெய்லியிடம் தெரிவித்தார்.

“கடந்த நான்கு ஆண்டுகளாக மட்டும்தான் எங்களது உடற்பயிற்சி வகுப்புகள் குறித்து ஒரு குடியிருப்பாளர் அடிக்கடி புகார் கொடுக்கிறார்,” என்றார் 78 வயது யூ.

“2025ஆம் ஆண்டு முதல் உடற்பயிற்சி செய்யும் இடத்தை 200 மீட்டர் தூரம் தள்ளியுள்ள இடத்தில் நடத்தினோம். ஆனால், அந்த இடத்தில் கடந்த ஜனவரி மாதம் 59 வயது நடையர்மீது கார் மோதியது. இதில் அவர் மாண்டார்.

“‘விபத்தின்போது அங்கு மூத்தோர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி மீண்டும் பழைய இடத்திற்கே உடற்பயிற்சி வகுப்பை மாற்றினோம்,” என்று திருவாட்டி யூ கூறினார்.

“உடற்பயிற்சி இடத்திற்குச் செல்லும் பாதையில் மரம் ஒன்று இருந்தது. அந்த மரம்மட்டும் பாதையைத் தடுக்காவிட்டால் அன்று உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களில் சிலர் உயிரிழந்திருப்பார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“உடற்பயிற்சி வகுப்பு இரவு 9.30 மணிக்கு முன்னரே முடிந்துவிடும். நாங்கள் வாரம் ஒருமுறைதான் பயிற்சி செய்கிறோம். புரிந்துணர்வுடன் குடியிருப்பாளர் நடந்துகொள்ள வேண்டும். சத்தத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்,” என்றார் திருவாட்டி யூ.

குறிப்புச் சொற்கள்