உள்ளங்களை இணைத்த உடற்பயிற்சி

உள்ளங்களை இணைத்த உடற்பயிற்சி

3 mins read
05d8e5fb-2358-4c9c-8175-c3213351858a
தங்கள் மகள்கள் நான்கு வயது சோஃபியா, இரண்டு வயது சாராவுடன் சக்திவேல், 37 - ஷகிலா, 31, இணையர். - படம்: செய்யது இப்ராகிம்
Google News Preferred Icon

உடற்பயிற்சிக் கூடத்தில் மலர்ந்த காதல் சக்திவேல், ‌‌ஷகிலா ஜென்னா இருவரையும் திருமண பந்தத்தில் இணைத்தது.

கடுமையாக உடற்பயிற்சி செய்வதில் அதிக நாட்டம் கொண்ட இருவருக்கும் அந்த ஆர்வமே வாழ்க்கைத் துணையைத் தேடித் தந்தது.

ஐந்து ஆண்டுகளுக்குமுன் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் 37 வயது சக்திவேலை சந்தித்தார் 31 வயது ‌‌ஷகிலா.

“முதன்முறையாக அவரைப் பார்த்தபோது நட்பு ரீதியாகத்தான் எங்கள் உறவு தொடங்கியது. பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக அடிக்கடி சந்தித்தோம்,” என்று கூறினார் ‌‌ஷகிலா.

நாளடைவில் சக்திவேலுக்கும் ‌‌ஷகிலாவுக்கும் இடையிலான நட்பு காதலாக உருவெடுத்தது. திருமணம் செய்துகொள்ள விரும்பிய அவர்களுக்கு வேறு எதுவும் தடையாக இருக்கவில்லை.

“நாங்கள் இருவரும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துவைத்திருக்கிறோம். அதுதான் வாழ்க்கைக்கு அடிப்படை என்பதை முழுமையாக நம்புகிறோம். திருமணம் செய்துகொண்டால் எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் எங்களுக்கு ஐயம் ஏற்படவில்லை,” என்ற திரு சக்திவேல், 2020ஆம் ஆண்டு தாங்கள் திருமணம் செய்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.

உடற்பயிற்சிப் பயிற்றுநராகப் பத்தாண்டுக்குமேல் பணியாற்றிவரும் சக்திவேலுக்கு துபாயில் உள்ள வாடிக்கையாளருக்குத் தனிப்பட்ட விதத்தில் உடற்பயிற்சிகளைக் கற்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்தகைய நல்ல வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்று நினைத்த அவருக்கு ஒரு தயக்கம்.‌

“என் மனைவி அப்போது கர்ப்பிணி. அவரைவிட்டுப் பிரிந்து துபாய்க்குச் செல்லவேண்டுமா என்று யோசித்தேன். என்னை ஊக்குவித்து எனக்குப் பக்கபலமாக இருந்தார் ‌‌ஷகிலா,” என விவரித்தார் சக்திவேல்.

‌‌‌ஷகிலாவின் உறுதுணையுடன் துபாயில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிவிட்டுச் சிங்கப்பூர் வந்த சக்திவேலுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது.

“கொரோனா காலகட்டத்தில் பலர் நேரடியாக உடற்பயிற்சிக் கூடங்களுக்கு வரத் தயங்கினர்,” என்று கூறிய அவர், நிதிப் பற்றாக்குறைக்கு ஆளானதாகச் சொன்னார்.

“சக்திவேல் மட்டும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. என்னால் முடிந்ததையும் செய்யவேண்டும் என்று நினைத்தேன்,” என்ற ‌‌ஷகிலா, 2021ஆம் ஆண்டு வீட்டிலிருந்தவாறு நல உணவுகளை, குறிப்பாக உடற்பயிற்சிகளில் அதிகம் ஈடுபடுவோருக்கு உணவு விற்கும் தொழிலைத் தொடங்கினார்.

முதலில் சிறிய அளவில் தொடங்கிய வர்த்தகம் 2024ஆம் ஆண்டு பெருகியது. ஒவ்வொரு நாளும் 60லிருந்து 70 பேர்வரை ‌‌ஷகிலாவின் நல உணவுகளை வாங்கினர்.

படிப்படியாக சக்திவேல் - ‌‌ஷகிலாவின் நிதிச்சுமை குறைந்து குடும்ப நிலைமை மேம்பட்டது. “இருவரும் நல்ல நிலையில் இருப்பதற்கு ‌‌ஷகிலாவின் கடுமையான உழைப்பும் ஒரு முக்கியக் காரணம்,” என்றார் சக்திவேல்.

கணவரின் உடற்பயிற்சி ஆர்வம் ‌‌ஷகிலாவையும் தொற்றிக்கொண்டது. இப்போது இருவரும் உடற்பயிற்சிப் பயிற்றுநர்கள். இருவருமே ஒரே இடத்தில் வேலை செய்கின்றனர்.

“கணவன், மனைவி இருவரும் ஒரே இடத்தில் வழக்கமாக வேலை செய்வது நல்லதில்லை என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், என் கணவர் இருக்கும் இடத்தில் வேலை பார்ப்பது எனக்கு மிகப்பெரிய ஆறுதல். வேலையில் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்க அதுவும் ஒரு முக்கியக் காரணம்,” என்றார் ‌‌ஷகிலா.

சக்திவேல் உடற்பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கும்போது ‌‌ஷகிலா தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார்.

காதலித்துக் கைபிடித்த உடற்பயிற்சி ஆர்வலர்களான சக்திவேல்-ஷகிலா இணையரின் மூத்த மகளான 4 வயது சோபியா சீருடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்