இந்த வாரம் பல நாட்களில் பிற்பகலில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (எம்எஸ்எஸ்) திங்கட்கிழமை (டிசம்பர் 16) டிசம்பரின் இரண்டாவது பதினைந்து நாளுக்கான முன்னுரைப்பில் தெரிவித்துள்ளது.
ஆண்டின் கடைசி வாரத்தில் மழை குறைய வாய்ப்புள்ளது. எனினும் அந்த வாரத்தில் வடகிழக்குப் பகுதியில் காற்று வலுப்பெற்றால் மழை பெய்யலாம்.
“ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாத கடை இரு வாரங்களுக்கான மொத்த மழைப்பொழிவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவாக இருக்கும்,” என்று அது குறிப்பிட்டது.
அடுத்த இரு வார காலத்தின் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாட்களில் 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சில நாட்களில் பிற்பகலில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருக்கலாம்.

