புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி வழித்தடத்தில் உள்ள செகார் எல்ஆர்டி நிலையத் தண்டவாளத்தில் ஆடவர் ஒருவர் விழுந்து மரணமுற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
அதுபோன்ற சம்பவங்களைக் கையாளக்கூடிய நடைமுறைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் போதுமான அளவில் உள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்த இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பயணப் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை காலை புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி தண்டவாளப் பாதையில் ரயில் ஒன்று வந்துகொண்டு இருந்தபோது 68 வயது லோ ஹீ சென் என்பவர் அந்த ரயிலின் முன் தவறி விழுந்து மாண்டார்.
அதனைத் தொடர்ந்து செஞ்சா, புக்கிட் பாஞ்சாங் ஆகிய எல்ஆர்டி நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தில் ஏறத்தாழ நான்கு மணி நேரம் இடையூறு ஏற்பட்டது.
அந்த மரணச் சம்பவம் குறித்து காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மரணமடைந்த திரு லோவின் குடும்பத்தினர், எல்ஆர்டி நடைமேடைகளின் பாதுகாப்பு குறித்தும் ரயில்-நடைமேடை இடைவெளி மற்றும் நடைமேடை தடுப்புகள் குறித்தும் அக்கறைகளை வெளியிட்டுள்ளனர்.
ஆளில்லா எல்ஆர்டி ரயில்களின் முன்னால் இடைமறிக்கக்கூடிய தடுப்புகளைக் கண்டறியும் ஆற்றல் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, எம்ஆர்டி மற்றும் எல்ஆர்டி தண்டவாளங்களில் ஆட்கள் விழக்கூடிய அபாயம் இருப்பதை நிலப் போக்குவரத்து ஆணையமும் ரயில் போக்குவரத்து நிறுவனங்களும் ஊடகங்களுக்கு அளித்த பதிலில் ஒப்புக்கொண்டுள்ளன.
சுரங்கப்பாதை நிலையங்கள் அனைத்திலும் முழு உயர நடைமேடைத் தடுப்புக் கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளதாக ஆணையம் கூறியது.
அதேவேளை, கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-தெற்கு வழித்தடங்களில் தரைக்கு மேலுள்ள நிலையங்களில் பாதி உயர நடைமேடைத் தடுப்புக் கதவுகளைப் பொருத்தும் பணி 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
இருப்பினும், ஆளில்லா எல்ஆர்டி நிலையங்களில் சில குறிப்பிட்ட இடம் சார்ந்த வரம்புகள் காரணமாக அத்தகைய தடுப்புக் கதவுகளைப் பொருத்த இயலவில்லை என்றும் ஆணையம் மேலும் தெரிவித்தது.

