ஜூரோங் லேக் வட்டார எம்ஆர்டி நிலையத்தையும் சுரங்கங்களையும் வடிவமைத்துக் கட்டுவதற்கான $590 மில்லியன் சிவில் ஒப்பந்தத்தை உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியுள்ளது.
குறுக்குத் தீவு ரயில் பாதைக் கட்டுமானத்தின் இரண்டாம் கட்டத்தில் இது அமையவுள்ளது.
ஒப்பந்தம் ‘கேடிசி சிவில் என்ஜினியரிங் & கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜூலை 31ஆம் தேதி ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
ஜூரோங் லேக் வட்டார மையத்தில் அமையவுள்ள இந்த நிலத்தடி நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் 2024ன் நான்காம் காலாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் இரண்டாம் கட்டத்தில் உள்ள மற்ற நிலையங்களுடன் இப்புதிய எம்ஆர்டியின் பயணச் சேவை 2032ஆம் ஆண்டு துவங்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் எட்டாவது எம்ஆர்டி பாதையாக இந்தக் குறுக்குத் தீவு ரயில் பாதை விளங்கும்.
ஜூரோங் லேக் வட்டாரம், பொங்கோல் மின்னிலக்க வட்டாரம், சாங்கி பகுதி ஆகிய பிரதான மையங்களை இணைக்கும் வகையில் கிழக்கு, வடகிழக்கு, மேற்குப் பகுதிகளில் உள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்த ரயில் பாதை சேவை வழங்கும்.
மற்ற எம்ஆர்டி பாதைகளில் சேவை வழங்கும் சந்திப்பு நிலையங்களாக இந்தக் குறுக்குத் தீவு ரயில் பாதையின் பாதி நிலையங்கள் இயங்கும். இதனால் ரயில் கட்டமைப்பில் மேலும் வசதியாகவும் எளிதாகவும் பயணிகள் வலம் வரலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஜூரோங் லேக் வட்டார நிலையம் தயாரானதும் அவ்விடத்திற்கும் பாசிர் ரிஸ் சென்ட்ரலுக்கும் இடையே குறுக்குத் தீவு ரயில் பாதைவழி பயணம் செய்வதற்கு 55 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
தற்போதுள்ள கிழக்கு மேற்கு ரயில் பாதையில் இதே பயணத்திற்கு 75 நிமிடங்களாகும்.
இதற்குமுன் தெம்பனிஸ் சந்திப்பு நிலையம், ஆர்ச்சர்ட் பொலிவார்ட் எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றைக் கட்டிய அனுபவம் கொண்டது தற்போது இந்த ஜூரோங் லேக் வட்டார எம்ஆர்டியைக் கட்ட ஒப்பந்தமான நிறுவனம்.

