ஈசூன் அணை அருகே போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

ஈசூன் அணை அருகே போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

2 mins read
ae5eb622-61e6-4911-8b22-1424ca86b00b
ஈசூன் அவென்யூ 1 - சிலேத்தார் வெஸ்ட் லிங்க் சாலைச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது என்று அவ்வட்டார மக்கள் கருதுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈசூன் அணை அருகே உள்ள சாலை சந்திப்புகளை நிலப்போக்குவரத்து ஆணையம் 2026ஆம் ஆண்டுக்குள் விரிவுபடுத்தவுள்ளது.

காலை மற்றும் மாலை உச்ச நேரங்களில் அந்தச் சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளன. அதைக் குறைக்கும் நோக்கில் நிலப்போக்குவரத்து ஆணையம் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளது.

ஈசூன் அணைக்கான சாலையின் நுழைவாயிலிலும் முடிவிலும் உள்ள பகுதிகள் விரிவாக்கம் காணும் என்று நிலப்போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

நீ சூன் லிங்க், நீ சூன் ஈஸ்ட், செம்பவாங் பகுதிகளில் தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் வீடுகளில் (பிடிஓ) மக்கள் குடியேறி வருவதால் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும், அதனால் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

ஈசூன் அவென்யூ 1 - ஈசூன் அவென்யூ 8 சந்திப்பு, ஈசூன் அவென்யூ 1 - சிலேத்தார் வெஸ்ட் லிங்க், சிலேத்தார் வெஸ்ட் லிங்க் - வெஸ்ட் கேம்ப் சாலை ஆகிய மூன்று சந்திப்புகளில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாடு காணவுள்ளன.

சாலை விரிவாக்கம் செய்த பிறகு சிலேத்தார் வெஸ்ட் லிங்க் சாலையைப் பயன்படுத்தி சிலேத்தார் நார்த் லிங்க் செல்லும் வாகனங்கள் வெஸ்ட் கேம்ப் சாலையைப் பயன்படுத்த முடியும்.

சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து கடந்த மார்ச் மாதம் நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் கோ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.

“2019ஆம் ஆண்டில் தான் ஒரு அடித்தளத் தலைவராக இருந்த போது ஈசூன் அணைப் பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக நீ சூன் லிங்கில் வாழும் குடியிருப்பாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். காலை 7 மணி முதல் 8.30 மணி வரையும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழை வந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக மாறுவதாக மக்கள் கவலைத் தெரிவித்தனர்,” என்று கோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

தற்போது எடுக்கப்படும் நடவடிக்கை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கும் தற்காலிகமான நடவடிக்கை. 2030ஆம் ஆண்டு முழு அளவிலான மாற்று திட்டம் இடம்பெறும். 2030ஆம் ஆண்டுக்கு நெடுங்காலம் இருப்பதால் இந்த தற்காலிக நடவடிக்கை மக்களுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்