தானியங்கி வாகனப் பயன்பாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகாரிகள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுவதாக, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் பொங்கோல் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
ஜனவரி 17ஆம் தேதி நிகழ்ந்த தானியங்கி வாகன விபத்து குறித்த விசாரணையின் முடிவுகள் தயாரானதும் வெளியிடப்படும் என்று திங்கட்கிழமை (ஜனவரி 19) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி சுன் தெரிவித்தார்.
பொங்கோலில் சாலை முன்னோட்டத்தில் ஈடுபட்டிருந்த கம்ஃபர்ட்டெல்குரோ (சிடிஜி) நிறுவனத்தின் தானியங்கி வாகனம் ஜனவரி 17ஆம் தேதி சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராய்ந்து வருகிறது. பொங்கோலில் ஐவர் அமரக்கூடிய கம்ஃபர்ட்டெல்குரோவின் தானியங்கி வாகனத்தின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், பொங்கோல் மேற்கிலிருந்து பொங்கோல் கிழக்கு வரை 10 கிலோ மீட்டர் பாதையில் செல்லும் கிராப் நிறுவனத்தின் ‘ரூட் 1’ என்று அழைக்கப்படும் இடைவழிச் சேவை தொடர்ந்து செயல்படும் என்று பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி சுன் கூறினார்.
ஒரே மாதிரியான வண்ணத்தில் இருந்தாலும் அந்த வாகனங்களை நிர்வகிப்பது வேறு நிறுவனமான கிராப். அத்துடன் அது வேறு வகையான வாகனம், வேறு மென்பொருளைப் பயன்படுத்துகிறது என்றார் அவர் .
அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கிராப் தானியங்கி வாகனச் சோதனை ஓட்டத்தில் பங்கேற்க ஜனவரி 12 முதல் பொங்கோல் வட்டாரவாசிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 17ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு எட்ஜ்டேல் பிளெய்னில் தன் நிறுவன வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக கம்ஃபர்ட்டெல்குரோ கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சாலையில் சிறிய பொருள் ஒன்றை உணர்ந்த அந்த வாகனம் அதற்கேற்ப செயல்பட்டுள்ளது. உடனே, வாகனத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி வாகனத்தை இயக்கத் தொடங்கியபோது விபத்து நேர்ந்துள்ளது. பயணிகள் எவரும் வாகனத்தில் இல்லை, எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அது தெரிவித்தது.
பொங்கோலில் திட்டமிடப்பட்டுள்ள மூன்று தானிங்கி வாகன வழித்தடங்களில் ஒன்றான, பொங்கோல் கிழக்கிலிருந்து பொங்கோல் வடக்கே செல்லும் தடத்தை சீன தானியங்கி வாகன நிறுவனமான pony.ai உடன் இணைந்து கம்ஃபர்ட்டெல்குரோ இயக்கவுள்ளது.
மற்ற இரு வழித்தடங்களைச் சீன தானியக்க நிறுவனமான WeRide உடன் இணைந்து தொழில்நுட்ப நிறுவனமான கிராப் நடத்தும்.
தானியங்கி வாகனங்களின் சோதனை ஓட்டங்களிலும் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது என்று கூறினார் அமைச்சர் சுன்.
பொங்கோல் குடியிருப்பாளர்களுக்கு போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் அதே வேளையில் பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்து அமைச்சும் நிலப் போக்குவரத்து ஆணையமும் தொடர்ந்து சேவை வழங்குநர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றும் என்றார் அவர்.

