எரிவாயுக் கசிவால் வெடிப்பு; சுவரில் பெரிய ஓட்டை

எரிவாயுக் கசிவால் வெடிப்பு; சுவரில் பெரிய ஓட்டை

2 mins read
07bc5262-55e1-45f0-8314-2c191cac2f54
வெடிப்பினால், சமையலறையின் சுவர் சேதமடைந்ததோடு, தரையில் பெரிய கான்கிரீட் துண்டுகளும் காணப்பட்டன. - படங்கள்: சாவ் பாவ்/ எஸ். எச். லீ
Google News Preferred Icon

‘மங்க்ஸ் ஹில்’ பகுதியில் உள்ள தமது வீட்டின் சமையலறையில் இருந்து வந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு 76 வயது எஸ். எச். லீ அதிர்ச்சி அடைந்தார்.

மார்ச் 20ஆம் தேதி அவரது வழக்கமான நடைமுறையில் செய்த மாற்றம் அவரின் உயிரைக் காப்பாற்றியது.

இரவு 11 மணி அளவில் தேவாலய நடவடிக்கைகளுக்குப் பிறகு வீடு திரும்பிய சில நிமிடங்களில் அவர் அந்த வெடிச் சத்தத்தைக் கேட்டார்.

அந்த நேரத்தில் வசிப்பறையில் இருந்த திரு லீ சமையலறைக்கு விரைந்துசென்றபோது, சுவரில் பெரிய ஓட்டை இருந்ததையும் தரையில் பெரிய கான்கிரீட் துண்டுகள், இடிபாடுகள் இருந்ததையும் கண்டார்.

“வழக்கமாக தேவாலயத்திலிருந்து வீடு திரும்பியதும் காப்பி கலக்குவதற்காக நான் சமையலறைக்குச் செல்வேன்,” என்று ஓய்வுபெற்ற வணிகரான அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

“இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அன்றிரவு நான் அவ்வாறு செய்யவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் உயிருடன் இருக்கிறேன்,” என்றார் அவர்.

திரு லீ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் காட்டிய படங்களில் சேதமடைந்த சமையலறையைக் காண முடிந்தது.

வெடிப்பைப் பற்றி கட்டடத்தின் பராமரிப்புக் குழுவிடம் தெரிவித்ததாகச் சொன்ன அவர், எரிவாயுக் கசிவு குறித்த எந்த நெடியையும் உணரவில்லை என்றும் கூறினார்.

அதோடு, தீயையோ புகையையோ பார்க்கவில்லை என்று கூறிய அவர், வெடிப்பினால் ஏற்பட்ட துகள்கள் மட்டுமே இருந்ததாகச் சொன்னார்.

மறுநாள், முதல் தளத்தில் இருந்த திரு லீயின் வீட்டைச் சோதிக்க பராமரிப்புக் குழுவினர் சென்றிருந்தனர். பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் சம்பவ இடத்திற்குச் சென்றன.

புளோக் 426 கிளமென்சியூ அவென்யூ நார்த்தில் தீச்சம்பவம் ஒன்றின் தொடர்பில் மார்ச் 21ஆம் தேதி காலை 10.30 மணிவாக்கில் உதவிக்கு அழைப்பு வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தீயை அணைத்ததாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீச்சம்பவத்தில் முதல் தளத்தில் இருந்த வீட்டின் சமையலறைச் சுவரினுள், எரிவாயுக் கசிவு ஏற்பட்ட குழாயைக் கண்டதாகவும் யாரும் காயமடையவில்லை என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்