லக்கி பிளாசா தாக்குதல்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

லக்கி பிளாசா தாக்குதல்: ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
6b37cddf-0807-4a5e-a618-90399dbf6d3d
வழக்கு குறித்து வரும் மே மாதம் 20ஆம் தேதி மறுபடியும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லக்கி பிளாசா கடைத்தொகுதியில் ஒரு பெண்ணைத் தாக்கியதாக நம்பப்படும் ஆடவர்மீது புதன்கிழமை (ஏப்ரல் 22) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சந்தேக நபரான 47 வயது ஆண்ட்ரூ சுரே‌ஷ் மார்க்கண்டன்மீது, கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி திருவாட்டி அலிபுத்டான் வில்மா லிட்கியோ எனும் பெண்ணுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக இரு குற்றச்சாட்டுகளும் அப்பெண்ணுக்குத் தொந்தரவு தரும் வகையில் நடந்துகொண்டதாக இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. அன்றைய தினம் சுரே‌ஷ், அப்பெண்ணின் கழுத்துக்குப் பின்னால் தாக்கியதாகவும் மாலை ஐந்து மணியளவில் அவரை உதைத்ததாகவும் நம்பப்படுகிறது.

சுரே‌ஷ், பெண்ணின் ஏடிஎம் அட்டையை வளைத்து அவரின் பையின் வாரைக் கிழித்து அவரின் கைப்பேசியை வீசியதாகவும் கூறப்படுகிறது. அதனால் கைப்பேசி சேதமடைந்தது.

மேலும், சென்ற ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி மிடில் ரோட்டில் உள்ள ஹோட்டல் 81ல் சுரே‌ஷ், பெண்ணைத் தாக்கியதாகவும் கருதப்படுகிறது.

ஹோட்டலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுரே‌ஷுக்கு நிபந்தனையுடன் கூடிய 12 மாத எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் காவல்துறை, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) அறிக்கை மூலம் தெரிவித்தது. ஆனால், அதை மீறும் வகையில் சுரே‌ஷ் பிப்ரவரியில் லக்கி பிளாசாவில் மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சுரே‌ஷின் வழக்கு வரும் மே மாதம் 20ஆம் தேதி மறுபடியும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்